இந்திரா கோபாலன்
தோசை மிளகாய்ப்பொடிக்கு வறுக்கும் போது இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளிவிதையையும் வறுத்து சேர்த்து அரைக்கவும். இதன் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலுக்கு நல்லது.
குக்கரில் அரிசியோடு நீரைக் குறைத்து, அதற்கு பதில் ஐஸ்கட்டிகள் சேர்த்து சமைக்க சாதம் உதிரி உதிரியாக வரும்.
குக்கரில் அரிசியோடு ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்க சாதம் வாசமாக இருக்கும்.
ரவா உருண்டை மற்றும் பயத்தம்பருப்பு உருண்டை தயாரிக்க நெய்க்கு பதில் சூடான பால்விட்டு பிடிக்க உருண்டை பிடிப்பது சுலபமாகும். நெய் சேர்த்தால் கொல்ஸ்டிரால் ஏறும் என நினைப்பவர்கள் இப்படிச் செய்யலாம்.
உளுத்தம்பருப்பு ,மிளகாய் வற்றல்,கடலை பருப்பு மற்றும் தேங்காய் இவற்றை எண்ணை விடாமல் வறுத்துப் பொடி செய்து வைக்கவும். எந்த காய்கறி கூட்டு தயாரித்தாலும் இந்தப் பொடியைச் சேர்க்கலாம். அரைத்து கஷ்டப்பட வேண்டாம்.
நீரிழிவு உள்ளவர்கள் பஜ்ஜி மாவில் ராகி மாவை சேர்த்து பஜ்ஜி தயாரிக்கலாம்.
வெஜிடபிள் உப்புமா செய்ய அரிந்த காய்கறிகளை எண்ணையில் வதக்கிய பின் உப்புமா தயாரிக்க சுவையாக இருக்கும்.
அவியல் நீர்த்துப் போகாமல் இருக்க தேங்காய், பச்சை மிளகாய் அரைத்து விழுதை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் தயிர் சேர்க்கவும்.
சிலருக்கு சாக்லேட் தயாரிக்கும்போது பதம் சரியாக வராமல் வாயில் ஒட்டிக்கொள்வது போல் வரும். அதை சீனிப்பாகில் திரும்பவும் போட்டு கிளற ஒட்டாமல் நன்கு வரும்.
மிக்சியில் எந்தவித காய்கறி துவையல் அரைப்பதாக இருந்தாலும் முதலில் வறுத்த சாமான்களை பொடி செய்து பிறகு காய்கறியை சேர்த்து அரைக்க நீர்த்துப் போகாமல் துவையல் கெட்டியாக இருக்கும்.
சட்டினி அரைக்கும் முன் முதலில் தேங்காய் பொட்டுக்கடலை மற்றும் பச்சைமிளகாயை நீர் விடாமல் அரைத்து பிறகு தண்ணீர் விட்டு அரைக்க சட்னி நீர்த்துப் போகாமல் கெட்டியாக இருக்கும்.
நீங்கள் பருப்புப் பொடி தயாரிக்கும் போது ஒரு கைப்பிடி கொள்ளையும் வறுத்து சேர்த்து அரைக்க வாயுத் தொந்தரவு இருக்காது.
விரத நாட்களில் அடையில் வெங்காயம் சேர்க்காதவர்கள் முட்டைகோசை பொடியாய் அரிந்து அடையில் சேர்த்து தயாரிக்கலாம்.
உருளைக்கிழங்கை வறுவலுக்காக சீவிய பிறகு அதை தண்ணீரில் களைந்து ஒரு வெள்ளைத் துணியால் துடைத்து வறுவல் தயாரிக்க வெள்ளை வெளேரென்று வரும்.
நீங்கள் காபி பௌடரை பாக்கெட்டோடு டப்பாவில் வைக்க அதன்வாசம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
தேங்காய் சட்னியில் உப்பு அதிகமானால் அரை மூடி எலுமிச்சை பிழிய சரியாகிவிடும்.
நீங்கள் மைசூர் பாகு தயாரிக்க சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து தயாரிக்க சுவை அபாரமாக இருக்கும்.தேங்காய் பர்பிக்கும் இப்படிச் செய்யலாம்
துருவிய காரட்டை அரைத்து தேங்காய் பர்ஃபி தயாரிக்க சுவையாக இருக்கும். உப்பில் சோளமாவை சிறிது சேர்க்க அது நீர்த்துப் போகாது.