பத்மப்ரியா
பிரட் மீந்து போனால் அதைக் காய வைத்து, மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். வறுவல், கூட்டு இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச் சிறிது தூவி, சரி செய்து விடலாம்.
மாங்காய் தொக்கு செய்யும் போது, மாங்காய்களை துருவி சேர்ப்பதற்கு பதிலாக, தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்துவிட்டால் தொக்கு செய்ய சுலபமாக இருக்கும்.
இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது, தண்ணீருக்கு பதிலாக ஐஸ் வாட்டர் போட்டு அரைத்தால், மாவு சூடாகாமலும், புளிக்காமலும் இருக்கும்.
அப்பளம் பொரிப்பதற்கு முன்னால், வெள்ளை துணியால் துடைத்து விட்டு பொரித்தால் எண்ணெய் கலங்காமல், அப்பளம் சிவக்காமல் இருக்கும்.
சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷ்ஷாக இருக்கும்.
தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.
எந்தவிதமான சூப் செய்தாலும், ஒரு ஸ்பூன் கெட்டி அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
அவல் பாயாசம் செய்யும் போது ஒரு கப் பாலுக்கு ஒரு கப் தேங்காய் பால் கலந்து செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது, சிறிது சர்க்கரை தூவி விட்டால், ரோஸ்ட் மொறுமொறுப்பாக இருக்கும்.
சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும். குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.
ஜவ்வரிசி பாயாசம் செய்யும் போது சிறிது வறுத்த கோதுமை மாவு சேர்த்தால் பாயாசம் கெட்டியாக இருக்கும். சுவையும் கூடும்.
பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
காலிஃப்ளவர் வேக வைக்கும் போது சிறிது மிளகுத்தூள் கலந்தால் காலிஃப்ளவரின் நிறம் மாறாமல் இருக்கும். சுவையும் கூடும்.
வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய வடகத்தை பொரித்து பொடித்துப்போட்டு இறக்கினால் வற்றல் குழம்பின் சுவை கூடும்.