சி.ஆர்.ஹரிஹரன்
நாம் தயாரிக்கும் எந்த பாதார்த்தம் நீர்த்துப் போனாலும், அதில் சத்து மாவைக் கலந்து விட்டால் அது கெட்டியாகி விடும்.
கீரை சமைக்கும்போது ஒரு மிளகு அளவிலான சுண்ணாம்பைக் கலந்து விட்டால், கீரை வெந்த பிறகும் பச்சை நிறம் மாறாமலிருக்கும்.
சமையலில் தேங்காய்ப்பால் பயன்படுத்துபவர்கள் முதல் நாளே தேங்காயை மட்டும் நன்கு மிக்ஸியில் அரைத்து, அப்படியே காற்றுப் புகாத டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் சமைக்கும் போது பிழிந்து பால் எடுத்தால், தேங்காய்ப்பால் ஃப்ரெஷ்ஷாக இருப்பதுடன் சமையல் வேலையும் சீக்கிரம் முடிந்து விடும்.
காய்களை வாங்கி வந்து ஃப்ரிட்ஜில் வைக்கும் போது தனித் தனி பைகளிலோ டப்பாக்களிலோ பிரித்து வைத்தால் ஒன்றின் மணம் மற்றொன்றுக்கு வராது.
பிரட் துண்டுகள் காய்ந்து அட்டைபோல் ஆகிவிட்டால், அவற்றைப் பிய்த்து மிக்ஸியில் போட்டு, கூடவே பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் உப்பு ஆகியவற்றையும் போட்டு கொரகொரப்பாக அரைத்து, பிசைந்து கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் காயந்ததும், இதை சுவையான பக்கோடாக்களாக பொரித்தெடுக்கலாம்.
தோசைமாவைக் கல்லில் ஊற்றியதும், அதன் மேலே ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடியை பரவலாகத் தூவிவிட்டு, தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றி வேக விடவும். தோசை மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
சேப்பங்கிழங்கு வேகவைக்கும் போது சில கிழங்குகள் வேகாமல் கல்போல அப்படியே இருக்கும். வெந்தவற்றை சமையலுக்கு பயன்படுத்திவிட்டு, கல் போல இருக்கும் கிழங்குகளை தனியே எடுத்து, தோல் சீவி, வட்டமாக நறுக்கி எண்ணையில் பொரித்து உப்பு, காரம் தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
முதல்நாள் இரவு தோய்த்த தயிரில் மறுநாள் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்னதாக அரை டம்ளர் பாலைச் சேர்த்துக் கலக்கி வைத்தால், புளிக்காமல் சரியான பதத்தில் தயிர் கிடைக்கும்.
வாங்கி வந்த காய்கறிகளில் முற்றல் எதுவும் இருந்தால் தூக்கி எறிய வேண்டாம். அப்படியே ஃப்ரிட்ஜில் சேமித்து வையுங்கள். இந்தக் காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி பத்து நிமிடம் வேக வையுங்கள். அந்தத் தண்ணீரை மட்டும் ஈர்த்து சூப், குருமா, சாம்பார் போன்றவை தயாரிக்கும்போது சேர்த்து விட்டால் கூடுதல் சத்து கிடைக்கும்.
குலோப் ஜாமூனுக்கு மாவு பிசையும் போது அத்துடன் ஒரு ஸ்பூன் கன்டன்ஸ்டு மில்க்கும் சேர்த்துப் பிசைந்தால் உருண்டைகளின் இனிப்பு கூடும்.
காலையிலேயே வைத்த சாம்பார், குழம்பு, துவையல், தயிர் போன்றவை மதியம் இறுகிப்போகாமல் இருக்க, சாதத்தை சற்று தளர்வாகக் கலந்து, அகலமான பாத்திரத்தில் பத்து நிமிடங்கள் ஆற விடவும். பிறகு லஞ்ச் பாக்ஸில் எடுத்து வைத்தால் சாப்பிடும் போது கெட்டியாகாமல் இருக்கும்.
சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாக வேண்டுமா? சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் ரசப்பொடி, நெய் சிறிதளவு, சிட்டிகை உப்பு கலந்து சாப்பிடுங்கள். எளிதில் ஜீரணமாகிவிடும்.