மகாலெட்சுமி சுப்ரமணியன்
இளநீர் பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், தேங்காய் பாயாசம் பண்ணும் போது வித்தியாசமாக ஜெல்லி க்ரிஸ்டலை தயாரித்து கட் பண்ணி சேர்த்து கலந்து விட சுவை நன்றாக இருக்கும்.
சுண்டல் தயாரிக்கும் போது ஒரே விதமான தானியத்தை மட்டும் உபயோகிக்காமல், இரண்டு மூன்று தானியங்கள் சேர்த்து வேக விட்டு தாளிப்பு செய்து துருவிய காய்கறி துருவல் சேர்த்து நன்கு கலந்து வெந்ததும் தேங்காய், பச்ச மிளகாய், சோம்பு கரகரப்பாக அரைத்ததை சேர்த்து கலந்து இறக்க சுவையோடு சத்தும் சேரும்.
பன்னீரை துருவி இளம் சூடாக இருக்கும் சுண்டல், வறுவலில் சேர்த்து இறக்க சுவை அதிகரிக்கும்.
இனிப்பு புட்டுக்கு மாவை வேக வைத்து எடுத்துக் கொண்டு அதனுடன் உருக்கிய நெய், நெய்யில் வறுத்த பாதாம், வெள்ளரி விதை சேர்த்து வறுத்த தேங்காய் சீவல், ஏலப்பொடி, சுக்குப்பொடி தூவி இறக்க சுவை சூப்பராக இருக்கும்.
துவையல் அரைக்கும் போது தானியங்களையும் வறுத்து கொரகொரப்பாக அரைத்து எடுக்க சுவையோடு சத்தும் சேரும்.
ஆப்பம் சாப்பிட ஆசை. ஆனால் ஊற வைத்து மெனக்கெட்டு அரைக்க இயலாது எனில் வழக்கமான தோசை மாவில் தேங்காய் பால் சேர்த்து தோசைக்கல்லில் மாவை ஊற்றி மூடி போட்டு வேக விட்டு எடுக்க ஆப்பம் டேஸ்ட்டில் சாஃப்ட் ஆக இருக்கும்.
எந்தவகை பர்பி பண்ணும் போதும் வறுத்த கடலைமாவு, இனிப்பில்லாத கோவா சேர்க்க சட்டென கெட்டிப்பட்டு பர்பி பதமாக வருவதுடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
எந்தவித பொரியல் செய்து இறக்கும் போது சீரக பொடி, தேங்காய் துருவல், டோஃபு பன்னீரை துருவி சேர்க்க சுவை நன்றாக இருக்கும்.
ஆவியில் வேக வைக்கும் காய், கறி எதுவானாலும் உப்பு சேர்த்து வேக விட்டு தாளித்து இறக்கும் போது உப்பு ஒரே சீராக எல்லா இடங்களிலும் பரவினால், டேஸ்ட்டாக இருக்கும்.
பணியாரம், கோதுமை, மைதா, ரவை இனிப்பு தோசை, பணியாரத்துக்கு மாவை தேங்காய் பால் சேர்த்து கரைத்து ஊற்றி செய்ய சுவை அதிகரிக்கும்.
பீட்ரூட் போன்ற கலர் காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்க அரிந்த காயுடன் சர்க்கரை ஒரு டீஸ்பூன் கலந்து வைத்திருந்து பின் தாளித்து காயை சேர்த்து வேகவிட கலர் மாறாமல் சுவையாக இருக்கும்.
வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள் உள்ள வீட்டில் பலகாரங்களை செய்யும் முன் அவர்களுக்கென உப்பு, இனிப்பு குறைத்து மாவை தயாரித்து பட்சணங்கள் செய்ய அவர்களும் சாப்பிட ஏதுவாக இருக்கும்.
எலுமிச்சை பழம், வாழைப்பழம் அதிகம் சேர்ந்துவிடும் இந்த பண்டிகை சீசனில் எலுமிச்சை பழத்தை சிரப்பாக பிழிந்து ஃபிரிட்ஜில்,வாழைப்பழத்தை பணியாரமாகவோ, ஸ்மூதியாக உடனுக்குடன் செய்து விட பழங்கள் வீணாகாது.
நெய் சேர்த்து செய்யும் பலகாரங்கள், சமையலில் எண்ணையும் கால் பங்கு சேர்த்து செய்யும் பலகாரங்கள் பளபளப்பாகவும், ஆறினாலும் சுவையாக இருக்கும்.
ஜவ்வரிசி, பாசிப்பருப்பு பாயசம் பண்ணும் போது நவதானிய மாவை வறுத்து சேர்த்து, வெந்ததும் வெல்லம் சேர்த்து கலந்து வறுத்த தேங்காய் சீவல், ஏலம் முந்திரி சேர்த்து கலந்து இறக்க சேர்ந்தாற்போல் வெந்து திக்காக சுவையாக இருக்கும்.
தாளிக்கும் கரண்டி நான் ஸ்டிக்கில் வைத்துக் கொண்டால் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றினாலே போதுமானதாக இருக்கும்.