கல்பனா ராஜகோபால்
இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும் போது சிறிது உப்பை சேர்த்து அரைத்தால், அது நீர்த்து விடாது.
கோதுமை தோசைக்கு மாவு கலக்கும் போது, ஒரு கைப்பிடி அளவு வெள்ளை ரவை கொண்டு தோசை வார்த்தால், சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் வரும்.
இஞ்சியை சிறிதளவு தனியாக (உப்பு சேர்க்காமல்) கெட்டியாக பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொண்டால், காய்கறிகள் மற்றும் தேநீர் போன்றவற்றில் உபயோகிக்க எளிதாக இருக்கும்.
பச்சை மிளகாயுடன் இரண்டு துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனை எண்ணெயில் வதக்கி ஆறவிட்ட பிறகு பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதனை பொரியல், கூட்டு செய்யும் போது உபயோகித்தால் சுவையாக இருக்கும்.
தேங்காய் சட்னி அரைக்கும் போது அதில் கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும். மேலும், தேங்காய் சட்னி தாளிக்கும் போது ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துக் கொண்டால் அஜீரணம் ஏற்படாது.
புதினா சட்னி செய்யும் போது அதனுடன் சிறிது வேர்க்கடலை சேர்த்து, தேங்காய் எண்ணெயில் வதக்கி அரைத்தால் சுவை கூடும்.
பூரிக்கு உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது, ஒரு உருளைக்கிழங்குடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து, தண்ணீர் விட்டு நன்றாக மசித்துக் கொண்டு சேர்த்தால் பூரி மசால் கெட்டியாக இருக்கும்.
பயறு வகைகளை ஊறவைத்து நல்லெண்ணெயில் சமைத்தால், ருசி கூடுதலாக இருக்கும்.
கிச்சடி செய்யும் போது, தண்ணீருடன் தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்த்தால் சுவை அபாரமாக இருக்கும்.
ரசத்திற்கு தக்காளியை பொடியாக நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து, ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி பின் அரைத்தால், ரசம் கமகமக்கும்.
வெள்ளை ரவை உப்புமா மீந்து விட்டால், அதனுடன் இரண்டு பெரிய வெங்காயத்தை வதக்கி சேர்த்து, கொழுக்கட்டைகளாக பிடித்து வேக வைத்து, தக்காளிச் சட்னியுடன் கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
அவல் உப்புமா செய்யும் போது, அவலை தேங்காய் பாலில் நனைத்து வைத்து செய்தால், சுவையாக இருக்கும்.