சி.ஆர்.ஹரிஹரன்
உருளைக்கிழங்கு பொரியல் மீந்து விட்டதா? அதில் உள்ள உருளைக்கிழங்கை மட்டும் கைபடாமல் தனியே எடுத்து மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேன் குழல்மாவு, உப்பு, காரத்தூள் சேர்த்துபிசைந்து, முறுக்கு அச்சில் பிழிந்தால் வாயில் போட்டதும் கரைந்து விடும் முறுக்கு நொடியில் தயார்.
புளிக்கு பதிலாக சாம்பாரில் தக்காளிப் பழங்களை சேர்க்கலாம். சாம்பார் புளி சேர்ப்பதை விட சுவையாக இருக்கும்.
பப்பாளிக்காயை செய்தித்தாளில் சுற்றி வைத்தால் அந்த புழுக்கத்தில் அடுத்த நாள் பழுத்து விடும்.
உருளைக்கிழங்கை அரைத்துச் சேர்த்து வடை செய்தால் வடையின் சுவையே அலாதி தான்.
காலையில் செய்த சாதம் மீத மிருந்தால், கைவசம் உள்ள கறிவேப்பிலைப்பொடி, தேங்காய்ப் பொடி போன்ற ஏதாவதொரு பொடியைத் தூவி சுவையான பொடி சாதம் செய்யலாம்.
குலோப் ஜாமூன் செய்யும்போது அப்படியே காயும் எண்ணெயில் போட்டுத்தானே எடுப்பீர்கள். அதற்கு பதிலாக குழிப்பணியாரம் தயாரிக்கும் பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் ஒரு உருண்டையைப் போட்டு மிதமான தீயில் பொரித்துப் பாருங்கள். ஜாமூன் உருண்டைகள் ஒன்றோடோன்று ஒட்டாமல், உடையாமல் இருப்பதோடு எண்ணையும் அதிகமாக செலவாகாது.
அரிசி, பருப்பு போன்ற சமையல் பொருட்களில் பூச்சிகள் வராமல் இருக்க, அவை வைக்கும் பாத்திரத்தின் அடியில் வேப்பங்குச்சிகளை போட்டு வைத்தால் போதும்.
தேன்குழலுக்கு மாவு பிசையும் போது தண்ணீர் விட்டு பிசைவதற்கு பதிலாக திக்கான தேங்காய்ப்பால் விட்டுப் பிசைந்தால் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.
கசப்புச்சுவை மற்றும் துவர்ப்புச் சுவை உள்ள பாகற்காய், சுண்டைக்காய், வாழைப்பூ, வெந்தயக்கீரை, முருங்கை இலை, மணத்தக்காளிக் கீரை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது பல நோய்களுக்கு நல்ல ஒரு மருந்து போல் செயல்படும்.
ரவை, கோதுமைமாவு, அரிசிமாவு போன்றவற்றைக் கலந்து தோசை செய்யும்போது, மிளகாய், கறிவேப்பிலை, ஒரு துண்டு வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, அதில் கடுகு தாளித்து மாவு வகைகளைச் சேர்த்து சுவையான தோசை செய்யலாம்.
தோசை மாவு புளித்துப் போய்விட்டால் அதில் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்து, இத்துடன் பாலையும் கலந்து, கெட்டியான தோசைகளாக வார்த்து, மேலே பொடியாக அரிந்த வெங்காயம் தூவி சுட்டெடுத்தால் சுவையான ஊத்தப்பம் தயார்.
உப்புமா வகைகள் செய்யும்போது மேலே ஓமப்பொடி தூவினால் அந்த டிபனின் கரகரப்பு கூடி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.