கே.எஸ்.கிருஷ்ணவேனி
முன்பெல்லாம் வீட்டிற்கு யாராவது வந்தால் முதலில் தாகம் தணிக்க நீர் மோர் தான் தருவார்கள். மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் இதில் அதிகம் உள்ளது. உடலுக்குக் குளிர்ச்சி தரும் நீர் மோரை விதவிதமாக செய்து ருசிக்கலாம்.
மோருடன் வெள்ளரிப் பிஞ்சு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தேவையான நீர் விட்டு அருந்த அது ஒரு ருசி.
இரண்டாவதாக மோரில் கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஒரு துண்டு, பச்சை மிளகாய் 1, உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்து தேவையான நீர் விட்டுப் பருக அருமையான ருசி.
மூன்றாவதாக நீர் மோரில் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சை இலைகளை (முத்தல் இல்லாதது) பறித்து கையால் நன்கு கசக்கி மோருடன் சேர்த்தால் மணமான, ருசியான, பசியைத் தூண்டும் நீர்மோர் தயார்.
நான்காவதாக பிளாக் சால்ட், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்து நீர் மோரில் கலக்கிப் பருகலாம்.
ஐந்தாவதாக 10 புதினா இலைகள், ஒரு பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து மோரில் கலந்து தேவையான அளவு நீர் விட்டுக் கலக்கினால் குணம், மணம் நிறைந்த புதினா மோர் தயார்.
ஆறாவதாக கொத்தமல்லி சிறிது பச்சை மிளகாய் உப்பு மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு கப் தயிரில் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கலக்கிப் பரிமாற மிகவும் சுவையான மல்லி மோர் தயார்.
ஏழாவதாக ஒரு கப் கெட்டித் தயிரில் தாராளமாகத் தண்ணீர் விட்டு மத்து கொண்டு கடைந்து பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள், கொத்தமல்லி, உப்பு சிறிது சேர்த்து வாணலியில் கடுகு, கருவேப்பிலையைத் தேங்காய் எண்ணெய்யில் தாளித்துக் மோரில் கொட்டி பரிமாற மிகவும் ருசியான தாளித்த மோர் தயார்.
எட்டாவதாக கடைந்த மோரில் உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டக் கலக்கலான மோர் தயார்.