நான்சி மலர்
பீகார் மாநிலத்தின் பாரம்பரிய இனிப்பு வகையான 'பீஹாரி புவா', பெரும்பாலும் ஹோலி பண்டிகை நாட்களில் செய்யப்படும் சுவையான இனிப்பு.
தேவையான பொருட்கள்
மைதா மாவு: 1 கப், சர்க்கரை: 3/4 கப், கனிந்த வாழைப்பழம்: 1, பால்: 1 கப், ஏலக்காய் தூள்: 1/2 டீஸ்பூன், தேங்காய் துருவல் : 2 டேபிள் ஸ்பூன், முந்திரி, பாதாம் விருப்பத்திற்கேற்ப, எண்ணெய்: பொரிப்பதற்கு.
1/7 - ஒரு பாத்திரத்தில் கனிந்த வாழைப்பழத்தைப் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும்.
2/7 - மசித்த வாழைப்பழத்துடன் மைதா மாவு, சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் மற்றும் நறுக்கிய உலர் பருப்புகளைச் சேர்க்கவும்.
3/7 - இதில் கொஞ்சம் கொஞ்சமாகப் பால் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு தோசை மாவை விட சற்று கெட்டியாகவும், அதே சமயம் கரண்டியால் ஊற்றினால் விழும் பதத்திலும் இருக்க வேண்டும்.
4/7 - இந்தக் கலவையை குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் அப்படியே ஊறவிடவும்.
5/7 - ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யை மிதமான தீயில் சூடாக்கவும்.
6/7 - ஒரு குழிக் கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயின் நடுவில் மெதுவாக ஊற்றவும். அது தானாகவே எழும்பி வரும்.
7/7 - இருபுறமும் பொன்னிறமாகும் வரை திருப்பிப் போட்டு வேகவிடவும். ஓரங்கள் மொறுமொறுப்பாக இருக்கும்போது எடுத்துவிடலாம்.
உங்கள் வீட்டில் இந்த எளிய முறையில் 'புவா' செய்து பாருங்கள், தட்டே காலியாகிவிடும்!