நான்சி மலர்
கோடைகாலத்தின் அதிகப்படியான வெப்பத்தைச் சமாளிக்கவும், உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவும் 10 சிறந்த இந்திய உணவுகள்..
1/10. இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த சாதம், காலையில் தயிர் அல்லது மோர் சேர்த்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிடும்போது உடலுக்கு அபரிமிதமான குளிர்ச்சியைத் தருகிறது.
2/10. தயிர் சாதம் இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை கொண்டது. இதனுடன் மாதுளை அல்லது திராட்சை சேர்த்துச் சாப்பிடுவது கூடுதல் சுவையையும் சத்தையும் தரும்.
3/10. வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. இதை அப்படியே துண்டுகளாகவோ அல்லது எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத்தூள் தூவிய சாலட்டாகவோ சாப்பிடுவது உடலை வறட்சியிலிருந்து பாதுகாக்கும்.
4/10. தர்பூசணி, நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்தது. இது உடலில் நீர் அளவைச் சமமாக வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த மதிய நேர உணவாகும்.
5/10. கம்பு, கேழ்வரகு ஆகிய தானியங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை. மோர் மற்றும் வெங்காயம் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்தக் கூழ் வகைகளை உணவாகக் கொள்ளும்போது உடல் புத்துணர்ச்சி பெறும்.
6/10. பாசிப்பருப்பு மற்ற பருப்புகளை விட எளிதில் செரிமானமாகக்கூடியது மற்றும் குளிர்ச்சி தரக்கூடியது. கோடையில் மசாலாக்கள் குறைவாகச் சேர்த்துச் செய்யப்படும் கிச்சடி வயிற்றுக்கு மிகவும் இதமானது.
7/10. இயற்கைச் சத்துக்கள் நிறைந்த நுங்கு, வயிற்றுப் புண் மற்றும் உடல் சூட்டினால் ஏற்படும் கட்டிகளைக் குறைக்க உதவும்.
8/10. புதினா இலைகள் இயற்கையிலேயே குளிர்ச்சி தரும் குணம் கொண்டவை. தயிர் சாதம் அல்லது சிற்றுண்டிகளுடன் புதினா சட்னி சேர்த்துக்கொள்வது செரிமானத்தைச் சீராக்கி உடலைக் குளிர்விக்கும்.
9/10. தயிரில் துருவிய கேரட், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் புதினா சேர்த்துத் தயாரிக்கப்படும் ராய்தா, காரமான உணவுகளால் ஏற்படும் வெப்பத்தைச் சமன் செய்ய உதவும் ஒரு சிறந்த பக்க உணவு.
10/10. சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்ற நீர்க்காய்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை மிகக் குறைந்த கலோரிகளையும் அதிக நீர்ச்சத்தையும் கொண்டிருப்பதால் கோடைக்கு ஏற்றவை.