ஆர்.கீதா
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலை வடகம், வற்றல் போட்டு நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். வடகம், வற்றல் போடுபவர்கள் தெரிந்து கொள்ள இதோ சில டிப்ஸ்.
வடகம், வற்றல் செய்யும்போது, கூழ் மாவுடன் சிறிது நெய் கலந்தால் பொரிக்கும் போது 'கமகம' வென மணக்கும்.
வடகம் பிழியும் அச்சின் உட்புறம் எண்ணெய் தடவினால் பிழிவது எளிது.
வடகக்கூழில் தக்காளிச்சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைச்சாறு, கேரட் மற்றும் பீட்ரூட் சாறு கலந்தால் வண்ண வண்ண வடகம் தயார்.
வடாம் மாவு தயாரித்தவுடன் சாப்பிட்டு பார்த்தால் உப்பு குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் காய்ந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.
வடாம் பிழியும் முன் ஒரு டம்ளர் பால் கலந்து கிளறினால் வடாம் வாசனையாக இருக்கும்.
அதுபோல் வடகம், வற்றல் போன்றவற்றை பொரிக்கும்போது, சிறிய குழிவான வாணலியை பயன்படுத்தினால் எண்ணெய் குறைவாக செலவாகும். உடம்புக்கும் நல்லது.
வெண்டைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்களை நறுக்கி உப்பு கலந்த நீர்மோரில் ஊற வைத்து, வெயிலில் காய வைத்தால் சுவையான, சத்தான வற்றல் ரெடி. வறுத்து சாம்பாரிலும் போடலாம். அப்படியே பொரித்தும் சாப்பிடலாம்.
வெங்காய வடகம் செய்யும்போது, நார்த்தங்காய் இலைகளை பொடி செய்து சேர்த்தால், வடகம் தாளித்த சாம்பார் மேலும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
வடகம் செய்பவர்கள் ஐந்து பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு ஜவ்வரிசி சேர்த்து மாவரைத்து வடகம் பிழிந்தால் வடகம் நல்ல மொறுமொறுப்பாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.
ஜவ்வரிசி வடகம் செய்யும் தண்ணீர் கொதிக்கும் போது சீஸைத் துருவிப் போடுங்கள். வடாம் காய்ந்து பொரிக்கும் போது நல்ல சுவையுடன் இருக்கும்.
எந்த வடகமானாலும் பெருங்காயம் சேர்ப்பது வாசனையைக் கூட்டும், உடம்புக்கும் நல்லது.
ஜவ்வரிசி வடகத்தில் தண்ணீர் அதிகமாகி விட்டால், சிறிது அவலை தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து, அதில் கலந்து விட்டால், கூழ் கெட்டியாகி விடும், சுவையும் கூடும்.
வடகம் செய்யும்போது சர்க்கரை, ஏதாவது ஓர் எசன்ஸ், ஏலக்காய் பொடி ஆகியவற்றை கூழில் சேர்த்தால் இனிப்பு வடகம் தயார்.
வடகம் காய வைக்கும்போது, இடையிடையே மிளகாய் வற்றலை வைத்தாலோ, கறுப்பு நிறத்துணி அல்லது குடை வைத்தாலோ காக்கைகள் மற்றும் அணில் வராது.