மணிமேகலை பெரியசாமி
இரசாயனங்கள் கலந்த மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக, இயற்கையான மெழுகு மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களைப் (Essential Oils) பயன்படுத்தி உங்கள் வீட்டிற்கு ஆரோக்கியமான நறுமணத்தை சேர்க்கும் மெழுகுவர்த்திகளை நீங்களே உருவாக்கலாம்.
படி 1: மெழுகுவர்த்தி செய்வதற்கான கலன்களை சுத்தம் செய்தல்: நீங்கள் தேர்ந்தெடுத்த ஜாடிகள் அல்லது கலன்கள் முற்றிலும் சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்யவும்.
படி 2: மெழுகை அளவிடுதல்: பயன்படுத்தும் கலன்களின் அளவுக்கு ஏற்ப இயற்கை மெழுகுத் துண்டுகளை அளக்கவும். மெழுகு உருகும் போது அதன் அளவு குறைவதால், ஜாடிக்கு ஏற்றவாறு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு மெழுகுத் துண்டுகளை அளந்து கொள்ளவும்.
படி 3: மெழுகை உருக்குதல்: இரட்டை கொள்கலன் முறையில் மெழுகை மிதமான தீயில் வைத்து, கவனமாகத் துளாவிக் கொண்டே மெழுகு முழுவதும் உருகும் வரை சூடாக்கவும். மெழுகு அதிக கொதிநிலையை அடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
படி 4: திரியை அமைத்தல்: மெழுகு உருகும் நேரத்தில், ஒவ்வொரு ஜாடியின் அடிப்பகுதியிலும் திரியை மையமாக வைத்து ஒட்டுவதற்கு ஒரு துளி உருகிய மெழுகை அல்லது விக் ஸ்டிக்கரை (Wick Sticker) பயன்படுத்தவும். திரியானது, ஜாடியில் நேராகவும், நடுவிலேயும் இருக்க வேண்டும்.
படி 5: திரியை நிலைநிறுத்துதல்: திரியின் மறுமுனையை ஒரு பென்சில் அல்லது சமைக்கும் குச்சியில் சுற்றி, அதை ஜாடியின் மேல் குறுக்காக வைத்து டேப் அல்லது கிளிப் கொண்டு நிலைநிறுத்தவும். இது மெழுகு ஊற்றும் போது திரி அசையாமல் இருக்க உதவும்.
படி 6: அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்தல்: உருகிய மெழுகை அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு சில நிமிடங்கள் ஆறவிடவும். மெழுகு சுமார் 60 முதல் 65 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை அடைந்த பிறகு, அத்தியாவசிய எண்ணெய்களைச் சேர்க்கவும். மெழுகு எடைக்கு 6% முதல் 10% வரை அத்தியாவசிய எண்ணெய் சேர்க்கலாம்.
படி 7: மெழுகு மற்றும் எண்ணெயைக் கலக்குதல்: சேர்த்த அத்தியாவசிய எண்ணெய்கள் முழுவதும் மெழுகுப் பரப்பில் சமமாகப் பரவ, மெதுவாகவும், சீராகவும் சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் வரை நன்கு கலக்கவும்.
படி 8: மெழுகை ஊற்றுதல்: உருகிய நறுமண மெழுகை, திரி மையத்தில் இருக்கும் ஜாடிகளில் மெதுவாகவும், கவனமாகவும் ஊற்றவும். ஜாடியின் விளிம்புக்குக் கீழே ஒரு அரை அங்குல இடம் விட்டு நிரப்பவும்.
படி 9: குளிர்வித்து கடினப்படுத்துதல்: மெழுகு ஊற்றிய கலன்களை அசைக்காமல், குளிர்ந்த அல்லது உலர்ந்த இடத்தில் விடவும். மெழுகு முழுவதுமாகக் கடினமாவதற்கு சுமார் 12 முதல் 24 மணிநேரம் ஆகும்.
படி 10: திரியை ஒழுங்குபடுத்துதல்: மெழுகுவர்த்தி முழுவதுமாகக் கடினமான பிறகு, திரி நிலைநிறுத்திகளை அகற்றவும். திரியின் நீளத்தை சுமார் அரை சென்டிமீட்டர் அளவிற்கு கத்தரிக்கோலால் ஒழுங்குபடுத்தவும். நீளமான திரி அதிக புகையை உருவாக்கக்கூடும்.
குறிப்பு: குறைந்தது 48 மணிநேரம் அப்படியே வைத்து பின், மெழுகுவர்த்தியை பயன்படுத்தவும். பயன்படுத்திய பிறகு பாத்திரங்களில் ஒட்டியுள்ள மெழுகை சூடான நீர் மற்றும் காகிதத் துண்டுகளால் துடைத்து எடுக்கலாம்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, நீங்களும் உங்கள் வீட்டிற்கு இரசாயனங்கள் இல்லாத, ஆரோக்கியமான நறுமண மெழுகுவர்த்திகளை உருவாக்கி மகிழ்ச்சியடையலாம்!