கிரி கணபதி
வீட்டின் சுவர்களில் உலாவும் பல்லிகளைப் பார்த்தாலே பலருக்கும் பயம் வந்துவிடும். அவை கடித்தால் விஷம் ஏறுமா, உணவில் விழுந்தால் உயிருக்கு ஆபத்தா என்ற பல கேள்விகளுக்கான அறிவியல் பூர்வமான உண்மைகளை இங்கே காண்போம்.
பல்லிகள் கடிக்குமா? வீட்டுப் பல்லிகள் பொதுவாக மனிதர்களைப் பார்த்தால் பயந்து ஓடிவிடும். நாம் அதைத் தொட முயன்றால் மட்டுமே தற்காப்புக்காக அவை லேசாகக் கடிக்க வாய்ப்புள்ளது.
கடிப்பதால் வலிக்குமா? இவற்றின் பற்கள் மிகவும் சிறியதாக இருப்பதால், கடிப்பதால் பெரிய வலி எதுவும் இருக்காது. அது நம் தோலைக் கிழித்து ரத்தம் வரும் அளவுக்குக் கடுமையானதும் அல்ல.
பல்லிக்கு விஷம் உண்டா? நமது வீடுகளில் உள்ள சாதாரண பல்லிகள் எந்தவிதமான விஷத்தன்மையும் கொண்டவை அல்ல. அவை மனிதர்களின் உயிருக்குச் சிறு ஆபத்தைக் கூட விளைவிக்காது என்பதுதான் உண்மை.
சாப்பாட்டில் விழுந்தால்? உணவில் பல்லி விழுந்துவிட்டால் அது விஷமாக மாறிவிடும் என்பது ஒரு தவறான கட்டுக்கதை ஆகும். ஆனால், அவற்றின் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவில் கலந்து ஃபுட் பாய்சன் ஆகலாம்.
பல்லிகளின் தோலிலும் எச்சிலிலும் 'சால்மோனெல்லா' என்ற பாக்டீரியாக்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, பல்லியைத் தொட்டாலோ அல்லது அதன் கழிவுகள் மேலே பட்டாலோ உடனடியாகக் கைகளைக் கழுவுவது அவசியம்.
இவை வீட்டில் உள்ள கொசுக்கள், சிலந்திகள் மற்றும் சிறு பூச்சிகளை வேட்டையாடிச் சாப்பிடும். இதனால் பல நோய்களைப் பரப்பும் கொடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நல்ல நண்பனாக இவை செயல்படுகின்றன.
எதிரிகளிடம் மாட்டிக்கொண்டால், பல்லிகள் தங்கள் வாலைத் தாங்களாகவே துண்டித்துவிட்டுத் தப்பித்துவிடும். துண்டிக்கப்பட்ட அந்த வால் சிறிது காலத்திலேயே தானாகவே மீண்டும் முளைத்துவிடும்.
பல்லிகள் 'இச் இச்' எனச் சத்தம் எழுப்புவதைப் பலரும் சகுனத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். ஆனால், அந்தச் சத்தம் மற்ற பல்லிகளோடு தொடர்புகொள்ளவும் இணையை ஈர்க்கவும் மட்டுமே எழுப்பப்படுகிறது.
பல்லிகளின் கால்களில் உள்ள நுண்ணிய முடிகள் சுவற்றில் வலுவாகப் பிடித்துக்கொள்ள உதவுகின்றன. இதனால்தான் எவ்வளவு வழுவழுப்பான சுவரிலும் அவற்றால் தலைகீழாக வேகமாக ஓட முடிகிறது.
பல்லிகளைப் பார்த்து அலறி அடித்து ஓட வேண்டிய அவசியமே இல்லை. அவை மிகவும் சாதுவான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் ஓர் அமைதியான உயிரினமாகும்.
வீட்டுப் பல்லிகள் எந்த வகையிலும் மனிதர்களுக்கு எதிரிகள் இல்லை. அவற்றால் கொடிய விஷம் பரவும் என்ற தவறான பயத்தைத் தவிர்த்து, அவற்றுடன் அமைதியாக வாழப் பழகுவதே நல்லது.