கிரி கணபதி
கை வலிக்கத் தேய்க்காமலும், காசு செலவு செய்யாமலும் நம் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே டைல்ஸைப் பளபளப்பாக மாற்றுவது எப்படி என இங்கே பார்ப்போம்.
1. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு வெள்ளை வினிகர் கலந்து டைல்ஸைத் துடையுங்கள். இது தரையில் உள்ள பிசுபிசுப்பு கறைகளை நீக்கி, டைல்ஸைப் புத்தம் புதுசு போலப் பளபளப்பாக மாற்றும்.
2. டைல்ஸின் இடுக்குகளில் உள்ள கருப்பு கறைகளை நீக்க பேக்கிங் சோடாவை நீருடன் கலந்து பூசுங்கள். பத்து நிமிடங்கள் கழித்துப் பழைய பிரஷ் கொண்டு லேசாகத் தேய்த்தால் அழுக்குகள் உடனே வந்துவிடும்.
3. டைல்ஸைச் சுத்தம் செய்ய ஒருபோதும் வீரியமிக்க ஆசிட்களைப் பயன்படுத்தாதீர்கள். இவை டைல்ஸின் மேல் இருக்கும் பளபளப்பான கோட்டிங்கை அரித்து நிரந்தரமாகச் சேதப்படுத்திவிடும்.
4. சமையலறை டைல்ஸில் படிந்துள்ள எண்ணெய் கறைகளைப் போக்க எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்துங்கள். இதிலுள்ள சிட்ரிக் ஆசிட் கறைகளை எளிதில் கரைப்பதோடு, வீட்டிற்கு நல்ல புத்துணர்ச்சியான நறுமணத்தையும் தரும்.
5. வாரம் ஒருமுறை மாப் போடும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பைப் போட்டுக் கொள்ளுங்கள். இது தரையில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்து வீட்டைச் சுகாதாரமாக வைத்திருக்கும்.
6. தரையில் டீ, காபி அல்லது உணவுப் பொருட்கள் சிந்தினால் அதை உடனே துடைத்துவிடுங்கள். காய்ந்துவிட்டால் அவை டைல்ஸில் நிரந்தரமான கறையாக மாறி தேய்ப்பதற்குக் கடினமாய் விடும்.
7. பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் பிடிவாதமான உப்பு கறைகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடு மிகச் சிறந்த தீர்வு. இதை கறையின் மீது தெளித்து சிறிது நேரம் கழித்துக் கழுவினால் டைல்ஸ் பளிச்சென்று மாறும்.
8. தரையைத் துடைக்கச் சாதாரண துணிகளுக்குப் பதிலாக மைக்ரோஃபைபர் மாப் அல்லது துணிகளைப் பயன்படுத்துங்கள். இவை டைல்ஸில் கீறல்கள் விழாமல் தடுத்து, தூசிகளை முழுமையாக ஈர்த்துக்கொள்ளும்.
9. அதிக அழுக்குப் படிந்த டைல்ஸ்களுக்கு வெந்நீர் ஊற்றித் துடைப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். வெந்நீரின் வெப்பம் தரையில் உள்ள கறைகளையும் எண்ணெய்ப் பிசுக்களையும் எளிதாகத் தளர்த்திவிடும்.
10. ஈரத்துணியால் துடைத்த பிறகு, கட்டாயமாக ஒரு காய்ந்த துணியைக் கொண்டு டைல்ஸைத் துடையுங்கள். இல்லையென்றால் தரையில் தண்ணீர் தடம் அப்படியே படிந்து டைல்ஸ் மங்கலாகத் தோன்றும்.
டைல்ஸ் சுத்தம் செய்வது பெரிய கஷ்டமான வேலை அல்ல; சரியான வழிகளைப் பின்பற்றினால் சில நிமிடங்களிலேயே முடித்துவிடலாம்.