ஜெயகாந்தி மகாதேவன்
மணிப்பர்ஸ், செல்வச் செழிப்பையும் வளங்களையும் வெளிப்படுத்தக் கூடிய ஓர் அடையாளச் சின்னமென ஃபெங் ஷுய் சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் வாழ்விலும் ஒரு பிரமாதமான மாற்றத்தை எதிர்நோக்க இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் ஆலோசனைகளை பின்பற்றலாமே!
ஃபெங் ஷுய் சாஸ்திரப்படி மணிப்பர்ஸ் ஒரு செழிப்பான வாழ்க்கையின் அடையாளம். அதன் நிறம், அளவு மற்றும் அது எந்த பொருளால் உருவாக்கப்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் மிக முக்கியமானவை. அதேபோல் பர்ஸை அவ்வப்போது மாற்றிகொள்வதும் மிகவும் முக்கியம்.
மணிப் பர்ஸை மாற்றவும் அனுகூலமான நாள் மற்றும் நேரம் பார்த்து மாற்றுவது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை சக்தி அதிகரிக்கவும், பண வரவை அதிகரிக்கச் செய்யும் சந்தர்ப்பங்கள் கூடி வரவும் உதவி புரியும்.
ஃபெங் ஷுய் சாஸ்திரப்படி மணிப் பர்ஸை மாற்றுவதற்கு வெள்ளிக்கிழமைகளை தேர்ந்தெடுக்கலாம். வெள்ளிக்கிழமை என்பது அன்பு, ஆஸ்தி, வளர்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவே வெள்ளிக்கிழமை பர்ஸை மாற்றுவதால் நல்ல அதிர்ஷ்டம், செல்வச் செழிப்பு போன்றவை பெருகுவதற்கான வாய்ப்பு உருவாகும்.
முழு நிலவு தோன்றும் பௌர்ணமி நாளன்றும் பர்ஸை மாற்றலாம். பௌர்ணமி தினம் நிறைந்த நல்ல நாளாகவும், மங்களகரமான நாளாகவும் போற்றப்படுகிறது. அந்த நாளில் நிலவு தன் முழுமையான சக்தியையும் தன்னுள் அடக்கி இருப்பதால், அந்த நாள் அதிரஷ்டத்தையும் செழிப்பையும் தந்து, நேர்மறை சக்தியை நமக்குள் உண்டு பண்ணும் என்று நம்பப்படுகிறது.
சூரியக் கடவுளின் தினமான ஞாயிறன்றும் உங்கள் பர்ஸை மாற்றிக்கொள்ளலாம். நேர்மறை சக்தி, அதிக பலம், தன்னம்பிக்கை ஆகியவை தந்து, நீங்கள் நிர்ணயித்திருக்கும் இலக்குகளை அடையவும் இந்த நாள் உதவிபுரியும்.
பர்ஸை மாற்றிக்கொள்ள வேண்டிய நாளையும் நேரத்தையும் துல்லியமாக கணக்கிட வேண்டுமாயின், சுப முஹூர்த்த தினங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். குட் ஃபிரை டே, விவாஹ் பஞ்சமி மற்றும் துவாதசி போன்ற நாட்களும் சிறப்பான நன்மைகளைக் கொண்டு வரும்.
பர்ஸை மாற்ற விரும்பும்போது எப்பொழுதும் புதியதாக ஒன்றை வாங்கிக் கொள்வதே சிறப்பு. மீண்டும் பழையதிற்கு மாறினால் அதில் எதிர்மறை சக்திகள் நிறைந்திருக்கக் கூடும். விளைவுகளும் எதிர்மறையாகவே அமையும்.
உங்கள் மணிப் பர்சில் ஒருபோதும் கிழிந்த அல்லது மிகப் பழைய நோட்டுகள் மற்றும் ஞாபகார்த்தப் பொருட்களை சேமித்து வைக்காதீங்க.
ஃபெங் ஷுய் சாஸ்திரப்படி உங்கள் பர்சின் நிறமும் உங்கள் அதிர்ஷ்டத்தை நிர்ணயிப்பதில் பங்கேற்கிறது. கருப்பு, சிவப்பு மற்றும் கோல்டன் கலர் பர்ஸ்கள், சொத்து, சுகம், வளர்ச்சி போன்றவற்றை குறைவில்லாமல் தர வல்லவை.
பர்சில் பணம் வைக்கும் போது அவற்றை தலை கீழாகவோ, கசமுசாவென்று முறையின்றியோ வைக்க வேண்டாம். மணிப் பர்சின் முழு கொள்ளளவும் நிறையும்படி நோட்டுகளை திணிக்காமல், மஹா லக்ஷ்மி வாசம் செய்ய, சிறிது இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.