கலைமதி சிவகுரு
அடர்ந்த நிறம் கொண்ட துணிகளுக்கு கஞ்சிப்போடும்போது அவற்றை உள்பக்கம் வெளியில் இருக்குமாறு திருப்பி கஞ்சியில் நனைக்கவும். இவ்வாறு செய்வதால் துணிகளின் வெளிபக்கத்தில் கஞ்சியின் அடையாளம் தெரியாமல் இருக்கும்.
வீட்டில் உள்ள சுவர் கடிகாரமாக இருந்தாலும், கைகடிகாரமாக இருந்தாலும் ஒருவரே சாவியைத் தர வேண்டும். ஒருவர் கைப்பட இருந்தால் நீண்ட நாட்கள் பழுதுபடாமல் இருக்கும்.
புத்தகம், செய்தித்தாள் போன்றவற்றில் எண்ணெய் பட்டுவிட்டால் தாமதியாமல் கோலமாவை அதன்மேல் தூவினால் எண்ணெய் உறிஞ்சப்பட்டு சிலமணி நேரங்களில் கறை அகன்றுவிடும்.
ரோஜா செடிகள் நிறைய பூக்கள் பூக்க, பீட்ரூட் தோலையும், உருளைக்கிழங்கு தோலையும் உரமாக போடவேண்டும்.
துணிகளை பிரஷ் செய்வதற்கு பாத்திரக்கடைகளில் விற்கும் மெல்லிய தேங்காய் நார்களால் செய்யப்பட்டுள்ள பிரஷ்களை உபயோகித்தால் சட்டை காலர் மற்றும் புடவை ஃபால்ஸ் இவை விரைவில் கிழிந்து பாழாவதில்லை. அழுக்கையும் எளிதாக எடுத்துவிட முடிகிறது.
நாம் வாங்கும் புதிய பூந்துடைப்பத்தை அந்தப்பூக்கள் நனையும் வரை தண்ணீரில் வைத்துவிட்டு பின்பு நன்கு உலர்ந்த உடன் பெருக்க உபயோகப்படுத்தினால் பூக்கள் ஆங்காங்கே சிதறாமல் இருக்கும்.
தீப்பெட்டி ஈரமாகி நமுப்பாக இருந்தால் அரிசிமாவை அதன்மீது தடவிவிட்டுக் கொளுத்தினால் டக் என்று எரியும்.
குழாயில் தண்ணீர் வருவதற்கு 1,2,3 என்று எவ்வளவு திருப்புகள் வேண்டுமானாலும் திருப்பலாம். ஆனால், மூடும்போது ஒரே ஒரு திருப்பில்தான் மூட வேண்டும். அப்பொழுதுதான் குழாயின் ஆயுள் நீடித்து அடிக்கடி வாஷர் போட வேண்டிய பிரச்னை வராது.
எறும்பு உட்புகக் கூடிய சர்க்கரை, பலகார டப்பா, பாட்டில் போன்றவற்றில் ஒரு பூண்டுப்பல் எடுத்து கையினாலேயே நசுக்கி மூடிபகுதிக்கு சற்று கீழே வளையம் போல் சுற்றி தடவி விட்டால் எறும்புகள் அண்டாது.
ஒருமாதத்திற்கு தேவையான எண்ணெயை வாங்கியபின் வெளியூர் செல்லவேண்டிய நிர்பந்தமா? கவலைப்படாமல் 5,6 வற்றல் மிளகாயைப் போட்டு மூடிவைத்து விடுங்கள். எவ்வளவு நாள் ஆனாலும் காரமின்றி, கசப்பின்றி ருசி மாறாமல் இருக்கும்.
பாத்திரங்களை தரையில் வைத்து துலக்கினால் பாத்திரமும் தேயும், கரகரப்பான ஒலி காதுகளையும் வருத்தும். பழைய மணைப் பலகை இருந்தால்போட்டு அதன்மேல் பாத்திரத்தை வைத்து தேய்த்தால் பாத்திரமும் தேயாது. காதுக்கும் இடைஞ்சல் வராது.
விசேஷ நாட்களில், முற்றத்தில் கோலம் இட்டு செம்மண் சுற்றி இட்ட பின் கோலத்தின் நடுவில் சிறிது மஞ்சள், குங்குமம் மற்றும் சிறிது உதிர்ந்த பூக்களை வைத்தால் கோலம் கொள்ளை அழகைத்தரும்.
சாதாரணமாக கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவைகளை ஒரு எவர்சில்வர் டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒருமாதம் வரை புதிதாகவே இருக்கும்.
புத்தகம் வைக்கும் அலமாரி, டிவி ஸ்டாண்டு, பீரோ மற்றும் பொம்மைகள் வைக்கும் ஷோகேஸ்களில் வசம்பு போட்டு விட்டால் ஆண்டுகள் ஆனாலும் பூச்சிகள் வராது. மணமும், தொடர்ந்து கிடைக்கும்.
செடிகளை சுற்றி சிறிது ஆழமாகக் குழி தோண்டி காய்கறித்தோல், நாளடைவான மாத்திரைகள், முட்டை ஓடுகள் போன்றவற்றை இந்தக் குழியில் நிரப்பி மண்ணை போட்டு மூடிவிட்டால் அவை மக்கி சிறந்த உரமாகும். ஈரத்தையும் தக்கவைக்கும்.