கிரி கணபதி
சமையலுக்கு மிகவும் தேவையான புதினாவை நாம் அடிக்கடி கடைகளில் பணம் கொடுத்து வாங்குவோம். ஆனால், அதை மிக எளிதாக நமது வீட்டு பால்கனியிலேயே வளர்க்க முடியும். அதற்கான எளிய வழிமுறைகள் இதோ.
1. கடையில் வாங்கிய புதினாவில் சற்று தடிமனான குச்சிகளை மட்டும் தனியாகத் தேர்ந்தெடுங்கள். அதிலிருக்கும் இலைகளை முழுவதுமாக கிள்ளி எடுத்து விடுங்கள்.
2. ஒரு கண்ணாடி டம்ளரில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி, அந்த குச்சிகளை உள்ளே வையுங்கள். மூன்றே நாட்களில் குச்சியின் அடியில் சிறிய வெள்ளை வேர்கள் முளைக்கத் தொடங்கும்.
3. வேர் வந்த பிறகு அவற்றை நட செம்மண், கொக்கோ பிட் மற்றும் மண்புழு உரம் கலந்த மண் கலவையைத் தயாரியுங்கள். மண் எப்போதும் இலகுவாகவும் காற்றோட்டமாகவும் இருப்பது மிகவும் அவசியம்.
4. தொட்டியில் விரலால் சிறிய குழிகளை செய்து வேர் வந்த குச்சிகளை மெதுவாக நடவும். குச்சிகளுக்கு இடையே போதுமான இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
5. புதினா செடி உயரமாக வளராது, ஆனால் பக்கவாட்டில் வேகமாகப் படர்ந்து வளரும் தன்மை கொண்டது. அதனால் ஆழமான தொட்டியை விட அகலமான தொட்டியைப் பயன்படுத்துவது செடிக்கு மிகவும் நல்லது.
6. புதினா செடிக்குக் காலை நேரத்து இளம் வெயில் படுவது மிகவும் பிடிக்கும். ஆனால் மதிய நேரத்துக் கடும் வெயிலில் செடியை வைத்தால் இலைகள் சீக்கிரம் கருகிவிடும்.
7. தொட்டியில் உள்ள மண் காய்ந்து போகாதவாறு தினமும் அளவாகத் தண்ணீர் தெளிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றினால் வேர்கள் சீக்கிரமாகவே அழுகிப் போய்விடும்.
8. செடி வளரத் தொடங்கியதும் மேலிருக்கும் துளிர் இலைகளை அடிக்கடி கிள்ளி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் தான் செடி காடு போல அதிக கிளைகளுடன் அடர்த்தியாக வளரும்.
9. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை புளித்த மோர் அல்லது பஞ்சகவ்யாவை செடியின் மீது ஸ்ப்ரே செய்யலாம். இது செடியின் அபரிமிதமான வளர்ச்சிக்குக் கைமேல் பலன் தரும் சூப்பர் டிப்ஸ் ஆகும்.
10. பூச்சிகள் வராமல் தடுக்க வேப்பண்ணெய் கரைசலை சிறிதளவு தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். உங்கள் அன்பான பராமரிப்பில் சில வாரங்களிலேயே தொட்டி முழுவதும் புதினா செழிப்பாக வளர்ந்து நிற்கும்.
வீட்டு பால்கனியில் வளரும் புதினாவின் வாசனையும் சுவையும் கடையில் வாங்குவதை விட பல மடங்கு அருமையாக இருக்கும். இன்றே ஒரு சிறிய புதினா குச்சியை வைத்து இந்த முயற்சியைத் தொடங்கிப் பாருங்கள்.