மகாலெட்சுமி சுப்ரமணியன்
கோலம் என்றால் அழகு என்று பொருள். கை விரலால் மணலில் மங்கையர் வரைவதை கூடலிழுத்தல் என்பர். இந்த கூடலிழுத்தலின் வளர்ச்சியே நொய்யல் என நூல்கள் சொல்கின்றன. கிராமங்களில் வாள், வில், போன்ற கோலங்கள் போடுவார்கள்.
கை விரலுக்கு பயிற்சி, கற்பனைத் திறனுக்கு வேலை, அதிகாலை ஓசோன் காற்று அதனால் நுரையீரல் பெறும் நன்மை, கால்களுக்கு உறுதி, ஞாபக திறனுக்கு பயிற்சி என பல நன்மைகள் கோலமிடுவதால் ஏற்படுகின்றன.
கோலமிட, குறிப்புகள் சிலவற்றை கடைபிடிக்க, நன்றாக இருக்கும்.
கோலமாவுடன் அரிசி மாவு கலந்து போட சீராக பளிச்சென்று இருக்கும்.
ரங்கோலி போடும் முன் புள்ளி வைத்து அதை விரிவுபடுத்திக் கொண்டே போக, கோலம் கோணலாக வராது.
தற்போது ரங்கோலி மாவு என கடைகளில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி போட பிசிறில்லாமல் அழகாக வரும்.
சின்ன கோலமிட்டாலும் ஒரே மாதிரி புள்ளி வைத்து கோல இழைகளை அழகாக போட, பார்க்க பளிச்சென்று இருக்கும்.
கோலப்புள்ளிகளை கலரில் வைத்து வெள்ளை கோலப்பொடியால் கோலமிட, எளிதாக கலர் கோலம் போட்ட திருப்தி இருக்கும்.
சாணம், பூசணிப்பூ கிடைக்காவிடில் பஞ்சகவ்ய விளக்கு வைத்து அதன்மீது பெங்களூர் ரோஜாவை கிழமைக் கேற்றவாறு வைக்க அழகாக இருக்கும்.
ஒரே மாதிரி பூக்கோலம், சங்கு கோலம், பறவை, விலங்குகள் என போடுவதோடு சமூக விழிப்புணர்வு ரங்கோலி, ஜியாமெட்ரிகல் டிசைன்கள் என போட உங்கள் கோலம் தனித்து தெரியும்.
அஞ்சறைப் பெட்டியில் கலர் பொடிகளை வைத்துக் கொண்டு கோலமிட எடுக்க, போட செளகரியமாக இருக்கும்.
அபார்ட்மெண்ட் வாசலில் இடமின்மையால் கோலம் போட முடியாத போது ஸ்டென்சில் வைத்து போட்டு கலர் கொடுக்க சூப்பராக இருக்கும்.
மாக்கோலமிட மாவுடன் ஒரு பங்கு வெள்ளை, ஒரு பாகம் மஞ்சள் கலந்து, ஒரு பகுதி பச்சை, ஆரஞ்சு என தனித்தனியாக கலந்து வைத்துக் கொண்டு கோலமிட மாக்கோலம் காய்ந்ததும் சூப்பராக இருக்கும்.
கோலம் போட்டதும் நடுவிலோ, ஓரத்திலோ அதன் மினியேச்சர் டிசைனை போட பார்க்க அழகாக இருக்கும்.
முதல்நாள் போட்ட கோலத்தை தண்ணீர் ஊற்றி கழுவாமல் கூட்டி சுத்தப்படுத்தி விட்டு பின் கழுவ சுத்தமாக இருக்கும். கூடியவரை தெய்வப் படங்கள், சின்னங்களை வாசலில் போடாமல் இருத்தல் நல்லது.
சாமி அறையில் ஐஸ்வர்ய கோலம், லஷ்மி குபேர கோலம், கிழமைக்கேற்ற கோலம் பச்சரிசியில் இட செல்வ வளம் பெருகும்.