சி.ஆர்.ஹரிஹரன்
சுட்டெரிக்கும் வெயில்காலம் வந்துவிட்டது. கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இதோ!
மோர், இளநீர், எலுமிச்சைச்சாறு, பழச்சாறுகள் தினமும் ஏதேனும் ஒன்று அவசியம் பருகுங்கள்.
கோடையின் சூட்டை தணிப்பதற்கு அடிக்கடி சாலட் வகைகள் செய்து சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவது நல்லது.
வெயிலில் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கூலிங் கிளாஸ், குடையை அவசியம் பயன்படுத்துங்கள். இது வெயிலின் வெப்பத்தை குறைக்கும். கண்களையும், சருமத்தையும் பாதுகாக்கும். தாகம் ஏற்பட்டால் குடிக்க வாட்டர் பாட்டிலில் தண்ணீரையும் அவசியம் எடுத்துச் செல்லுங்கள்.
வீட்டில் இருக்கும் குழந்தைகளை வெயிலில் விளையாட விடாதீர்கள். கேரம், செஸ் போன்ற இன்டோர் கேம்ஸில் அவர்களை ஈடுபடச் செய்யுங்கள்.
சருமநோய்கள் வராதிருக்க கோடைக்காலத்தில் உள்ளாடைகள் உட்பட அனைத்து ஆடைகளையும் சற்று தளர்வாக பருத்தித்துணியிலேயே அணிவது நல்லது.
வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கச கசாவை மிக்ஸியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டு சாப்பிட வயிற்று வலி நீங்கி விடும்.
நீராகாரம் ஓர் அருமையான பானம். காலையிலும், டிபன் சாப்பிட்ட பின்னரும் ஒரு டம்ளர் அருந்தலாம். இதை விட உடலைக் குளிர்ச்சியாக வைக்கக் கூடிய பானம் எதுவும் இல்லை. நீராகாரத்தில் வெங்காயம், அல்லது கேரட் நறுக்கிப்போட்டு, நார்த்தங்காய் வற்றலுடன் இரண்டு டம்ளர் பருகி வர ஏசியில் இருப்பது போல் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
துளசி, சந்தனம், வேம்பு மற்றும் மஞ்சள் இவற்றை நைசாக அரைத்து உடம்பில் பூசி வர வேனல் கட்டிகள் ஆறும், சருமம் மிருதுவாகும்.
குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது குளுமையான நுங்கை மசித்துத் தடவுங்கள். சீக்கிரமே குணமாகி விடும்.
பல வெக்கை நோய்களுக்கு இளநீரை ஒரு மருந்தாகவே பயன்படுத்த டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
கோடை நேரத்தில் நீங்கள் அருந்தும் ஃப்ரூட் சாலட்டில் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொண்டால் சுவை நன்றாக இருப்பதுடன் அதிக அளவில் இரும்புச் சத்தும் கிடைக்கும்.
கோடைகாலத்தில் காலையிலும், மாலையிலும் பச்சைத் தண்ணீரில் குளிப்பது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
இந்த சமயத்தில் பருகும் நீர் மோரில் அரிந்த பச்சை மிளகாய்க்கு பதில் சிறிதளவு பொடித்த சுக்கு சேர்த்துப் பாருங்கள். சுவை தூக்கலாக இருக்கும். உடம்பை குளிர்ச்சியாக வைக்கவும் நல்லது.
வெங்காயத்தைப் பச்சையாகமென்று தின்று வந்தால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கி விடும்.
வேனில்கால நேரத்தில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலை நேரத்தில் பருகி வர உடல் உஷ்ணம் குறையும்.
கோடைக்காலத்தில் வியர்க்குருவினால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த கஞ்சியில் கலந்து உடம்பில் பூசினால் வியர்க்குரு மறையும்.
இந்த சமயத்தில் வெயிலைப் பற்றியே அதிகமாகப் பேசி களைத்துவிட வேண்டாம். வடாம், வற்றல் போட்டு வெயிலை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!