ஆர்.ஜெயலட்சுமி
குங்குமம் வைத்து சிலருக்கு நெற்றியில் அரிப்பு ஏற்பட்டு கருமையாக மாறிவிடும். சிறிதளவு துளசி இலை, தேங்காயை மை போல அரைத்து அந்த இடத்தில் பூசி வந்தால் கருமை மறைந்து விடும்.
பொரியல் கூட்டு துவையல் செய்யும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயம் தாளித்து சேர்க்க வேண்டும். உடலில் பித்தம் நீங்கி உடல் குளிர்ச்சி அடையும்.
பெருங்காயம், வெல்லம், மஞ்சள், சீரகம், களிப்பாக்கு வெந்தயக்கீரை, தனியா இவற்றில் மிக அதிக அளவு இரும்புச் சத்து இருக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இவை நல்லது.
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி தண்ணீரில் காய்ச்சி சிறிது வெல்லம் சேர்த்து இரண்டு வேளை குடித்தால் வாயு நீங்கும் பசியும் உண்டாகும்.
சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்க வேண்டும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி தீரும், உடலும் குளிர்ச்சி அடையும்.
ரோஜா இதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்த்து வந்தால் நறுமணம் பரப்பி உள்ளத்திற்கு உற்சாகத்தை கொடுப்பதோடு அழகாக முடி வளரவும் உதவுகிறது.
வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு நின்றுவிடும் வயிற்று வலியும் இருக்காது.
மாங்கொட்டை பருப்பை உலர்த்தி தூள் செய்து தேனில் குழைத்து உண்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளிப்படும்.
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி, குப்பைமேனி இலை ஆகியவற்றை வெயிலில் நன்றாக காய வைத்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை சிறிது எடுத்து பாலில் குழைத்து முகத்தில் தடவி இருபது நிமிடம் ஊற விட்டு குளித்தால் வேர்க்குரு வராமல் வெயிலால் கருத்துப் போகாமல் முகம் பளபளப்பாக இருக்கும்.
மிளகு சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக தூள் செய்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் அஜீரணம் பசி மந்தம் நீங்கும்.
தினமும் ஒரு டம்ளர் கொள்ளு வேக வைத்த நீரில் உப்பு மிளகு சேர்த்து ஒருவேளை காபிக்கு பதில் குடித்து வர ஊளைச் சதையும் குறையும் அடி வயிறும் வற்றும்.
சிறிது மிளகுத்தூளுடன் தேனையும் சேர்த்து நெல்லிக்காய் சாற்றில் கலந்து சாப்பிட்டு வர சளி மற்றும் மூக்கடைப்பு நீங்கும்.
ஜுரம் விட்டவுடன் முதலில் தலைக்கு குளிக்கும்போது ஓமத்தை அரைத்து தேய்த்துக்கொண்டு பிறகு குளித்தால் நீர் கோர்த்துக் கொள்ளாது.
வெற்றிலை மீந்துவிட்டதா காரக்குழம்பு செய்யும் போது அதை எண்ணெயில் வதக்கி குழம்பில் போட்டு கொதிக்க விட வேண்டும். கடுகிற்கு பதில் ஓமம் தாளித்தால் சுவையான ஓமம் வெற்றிலை குழம்பு தயார் ஜலதோஷம் பித்தம் இவற்றை போக்கும்.
மிளகு, வெல்லம், பசு நெய் ஆகிய மூன்றையும் சேர்த்து லேகியமாக கிளறி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர தொண்டை புண் சரியாகும்.
மருதாணி இலை நூறு கிராம் எடுத்து கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்ச வேண்டும் நன்றாக இலைகள் தீய்ந்த பின் இறக்கி ஆறிய பிறகு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு தலைக்கு தேய்த்து வந்தால் நன்கு முடி வளரும். முடி கொட்டாமலும் இருக்கும் .