கலைமதி சிவகுரு
முருங்கை இலையை கொத்தாக எண்ணெயில் பொரித்து இலைகளை உதிர்த்து கொண்டு அத்துடன் வறுத்த மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கி நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.
மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருட்கள் ரொம்ப கொஞ்சமாக இருந்தால் ஜாருக்குள் முக்கால்வாசி இறங்கும் குழிவான பாத்திரத்தினாலேயோ அல்லது தட்டினாலேயோ மூடி விட்டு அரைத்தால் நன்றாக மசியும்.
வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் ஃபேன் ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்து விட்டால் புகை உள்ளே சுற்றாது.
ரப்பர் பேண்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரை போட்டு வைத்தால் அவை ஒட்டிக் கொள்வதில்லை.
மெழுகுவர்த்தி ஏற்றும் போது அகல் விளக்கில் நிறுத்தியப் படி ஏற்றி வைக்கலாம். தரையோ ஜன்னலோ வீணாகாது. அகல் விளக்கில் விழும் மெழுகை லேசாய் உருக்கி திரி போட்டு மறுபடியும் விளக்கின் அளவுக்கு ஏற்றலாம்.
மழை, குளிர் காலங்களில் துவைத்து காயவைத்து துணிகள் காய்ந்து இருந்தாலும் ஜில்லென்றுதான் இருக்கும். அவைகளை மடித்து கம்பளியினுள் சுருட்டி வைத்து விட்டு 3 மணி நேரம் கழித்து உடுத்திக் கொண்டால் வெயிலில் காய வைத்த துணிகள் போல் இருக்கும்.
வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து நசுக்கி முகப்பரு மீது தடவி வந்தால் பருக்கள் உடன் குணமாகும்.
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் விளக்கு அதிக நேரம் எரிய வேண்டுமானால் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயும், நல்லெண்ணெயும் கலந்து ஏற்ற வேண்டும்.
மிளகாய் செடியில் பூக்கள் பூத்திருக்கும் போது சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் கலந்த தண்ணீரைச் செடியில் தெளித்தால் வண்டுகள் பூவை மொய்த்து விடும். அத்தனைப் பூக்களும் காயாகி விடும்.
சுண்ணாம்பில் சிறிது தேங்காய்த் தண்ணீர் விட்டு வைத்தால் இறுகி போகாமல் எப்பொழுதும் இளகிய பதத்தில் உபயோகிக்க ஏதுவாக இருக்கும்.
எறும்பு கடித்தால் பற்பசையை எறும்பு கடித்த இடத்தில் தேய்க்கவும். எல்லாம் பற்பசையில் உள்ள ‘மின்ட்’ தான் அதன் ரகசியம்.
திருமண விசேஷ நாட்களில் பந்தியில் இலையின் கீழ் ஒரு சிறு கவர் வைத்தால் சாப்பிட முடியாதவர்கள் ஸ்வீட், வாழைப்பழம் போன்றவற்றை வீணாக்காமல் எடுத்து வைத்துக் கொள்ள முடியும்.
அரிசியில் வண்டின் தாக்குதல் இல்லாமல் இருக்க நிழலில் உலர்த்திய நொச்சி இலைகளை அரிசியில் பரப்பி வைக்கலாம்.
பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதை கவிழ்த்து பழைய டூத் பிரஷ்ஷை எரித்து உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது ஊற்றவும். ஓட்டை விரைவில் அடைபட்டுவிடும்.
சோபா, மேஜைகளை இடம் மாற்றும் முன் அவற்றின் கால்களில் பழைய சாக்ஸ்களை நுழைத்து விடவும். இப்போது இஷ்டப்படி இழுக்கலாம். தரையில் கீறல் விழாது, பொருட்களும் பாழாகாது.