சி.ஆர்.ஹரிஹரன்
அலுவலகத்தில் தினமும் செய்ய வேண்டிய வேலைகளுக்கான லிஸ்டைத் தயார் செய்து கொள்ளுங்கள். இதனால் அலுவலகத்தில் எதிர் கொள்ளும் டென்ஷன் குறைந்து விடும்.
ஆபீஸில் வேலை செய்யும் போது மன இறுக்கத்தைத் தவிருங்கள். சில வேலைகள் தடை படுவதாலோ, தாமதப்படுவதாலோ, உலகம் முடிந்து விடப்போவதில்லை என்பதை உணருங்கள்.
அதுபோல் ஆபீஸ் வேலை செய்யும் போது எல்லாப் பொறுப்புகளையும் நீங்களே சுமக்காதீர்கள். மேலதிகாரியிடம் பேசி, உங்கள் கூட வேலை செய்பவர்களுக்கும் வேலையை சமமாக பகிர்ந்தளிக்கச் சொல்ல தயக்கம் கொள்ள வேண்டாம்.
எவ்வளவு தான் அவசர வேலை இருந்தால் கூட, வேலைக்கு செல்லும் பெண்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது. மதியம் வரை உங்களை உற்சாகத்துடன் வேலை பார்க்க உதவும் எனர்ஜி டானிக் தான் காலை உணவு என்பதை மறந்து விடாதீர்கள்.
இட்லி, தோசை, பூரி, இடியாப்பம், சப்பாத்தி போன்ற பலகாரங்கள் காலை உணவாக உங்கள் வார உணவு அட்டவணையில் இடம் பெறட்டும்.
கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள், ஒரு மணி நேரம் வேலை செய்து முடித்ததும் கண்களை பாதுகாக்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடன் வேலை செய்பவர்களின் அலுவலக வேலைகளில் தேவையில்லாமல் தலையிட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம். அது போல் ஆபீஸ் கிசுகிசுக்களிலும் ஆர்வம் காட்டாதீர்கள்.
ஆபீஸில் வேலை செய்யும்போது உங்கள் நடை, உடை, பாவனைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நன்றாக அணிந்து கொண்டு பணி புரிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
அலுவலக நண்பர்களிடம் பணம் கடன் வாங்குவதோ, கொடுப்பதோ வேண்டாம். இது தேவையில்லாத மனக்கசப்புக்கு வித்திடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் போன்றவற்றை மகிழ்ச்சியுடன் செலவிடுங்கள். ஷாப்பிங் போவது, கடற்கரை, பார்க் போன்ற இடங்களுக்கு செல்வது, வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயில்களுக்கு இறை வழிபாடு செய்யச் செல்வது போன்றவை மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்க துணை புரியும்.