கே.எஸ்.கிருஷ்ணவேனி
இன்டோர் பிளான்ட்ஸ் என அழைக்கப்படும் வீட்டுக்குள் வளர்க்கக்கூடிய தாவரங்கள் நம் வீட்டின் அழகை அதிகரிப்பதுடன், சுத்தமான காற்றையும் வழங்கி நம்மை ஆரோக்கியமாக இருக்க உதவும்.
பால்கனி, வரவேற்பறை ஆகிய இடங்களில் சிறிய அளவில் தொட்டிகளை வைத்து செடிகளை வளர்க்கலாம். இவற்றிற்கு வெயில் அதிகம் தேவைப்படாது. அப்படிப்பட்ட சில இன்டோர் பிளான்ட்ஸ்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
ஸ்பைடர் பிளான்ட்:
ஸ்பைடர் பிளான்ட்கள் அழகான வளைந்த இலைகளைக் கொண்டு பார்க்க மிக அழகாக இருக்கும். இவை காற்றை சுத்திகரிக்கும். சூரிய ஒளி இதற்கு தேவையில்லை. அத்துடன் குறைந்த அளவே நீரும் தேவைப்படும் செடி இது.
பீஸ் லில்லி:
பூக்கும் தாவரமான இது மிக அழகான வெள்ளை பூக்களைக்கொண்டது. இவை வளர நேரடி சூரிய ஒளி தேவையில்லை. வாரத்திற்கு இரண்டு முறை நீர் ஊற்றினாலே போதுமானது. சில மணி நேரம் இவற்றை வெயிலில் வைத்து எடுத்தால் போதும்.
ஃபிலோடென்ட்ரோன்:
நம்முடைய இந்திய கால நிலைக்கு ஏற்ற செடி இது. மறைமுக சூரிய ஒளியில் வளரக்கூடியவை. குறைந்த ஒளியிலும் நன்கு செழிப்பாக வளரும். இத்தாவரம் ஸ்டெம் கட்டிங் செய்வதன் மூலம் எளிதாக வளரக் கூடியது.
சைனீஸ் எவர்கிரீன்:
அழகான மற்றும் அடர்த்தியான இலைகளுடன் கூடிய ஒரு பளபளப்பான தோற்றத்தை கொண்டுள்ள செடி இது. அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்தமான செடி இது. இவற்றிற்கு தினம் நீர் விடத் தேவையில்லை. அடியில் உள்ள மண் நன்கு காய்ந்தவுடன் நீர் ஊற்றினால் போதும்.
பொத்தோஸ்:
தொங்கும் தொட்டிகளில் நன்கு வளரக்கூடிய செடி இது. பராமரிப்பதும் எளிதானது. இதன் இலைகளில் மட்டும் தினம் சிறிது தண்ணீர் தெளிக்க நன்கு செழித்து வளரும்.
ரப்பர் செடி:
இவற்றின் இலைகள் பெரியதாகவும், பளபளப்பாகவும் இருக்கும். காற்றை நன்கு சுத்திகரிக்கும். அதிக நீர் தேவையில்லை. இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தாலோ அல்லது மண் மிகவும் வறண்டதுபோல் காணப்பட்டாலோ மட்டுமே தண்ணீர் ஊற்றினால் போதுமானது.
அலோவேரா (கற்றாழை):
அழகான தடித்த சதைப்பற்றுள்ள இந்த தாவரத்திற்கு பெரிதாக எந்த பராமரிப்பும் தேவையில்லை. வாரத்திற்கு ஒருமுறை சூரிய ஒளி மற்றும் நீர் விட்டாலே போதுமானது.
மணி பிளான்ட்:
இதனை வளர்க்க தொட்டிகள்கூட தேவையில்லை. பாட்டில்களில் குறைந்த பராமரிப்புடன் மிகவும் எளிதாக வளர்க்கலாம். வாஸ்து மற்றும் ஃபெங் சுய் -ன்படி இந்த தாவரம் நல்ல அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாகவும் கூறப்படுகிறது.
பாம்பு செடி:
ஸ்நேக் பிளான்ட் குறைந்த சூரிய ஒளியில், குறைந்த நீரைக் கொண்டு செழித்து வளரும் தாவரமாகும். இதுவும் சிறந்த காற்று சுத்திகரிப்பானாகும். வளர்ப்பதும் எளிது.
வீட்டில் குறிப்பாக வரவேற்பறை மற்றும் படுக்கை அறையில் செடிகளை வைக்க நமக்கு புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். நம் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் இவ்வகை செடிகள் வீட்டுக்குள் வரும் காற்றை தூய்மைப்படுத்துவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.