கே.எஸ்.கிருஷ்ணவேனி
அம்பேத்கர் தன்னுடைய கற்றறிந்த திறனையும், அறிவையும் சமூக மாற்றத்திற்கான கருவியாக பயன்படுத்தியவர். இன்றளவும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக அவர் பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீடு அவர்களின் வாழ்க்கையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. இவர் கல்வியை சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக மட்டும் பார்க்கவில்லை, அது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்றும் கருதினார்.
எந்த ஒரு சமூகத்தின் முன்னேற்றமும் அந்த சமூகத்தின் கல்வியின் முன்னேற்றத்தை பொறுத்தது.
அறிவுதான் மனித வாழ்க்கையின் அடிப்படை. மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவும் அதிகரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப்பட வேண்டும்.
ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் வழங்குவதே நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். எனவே கட்டாய தொடக்கக் கல்விக்கான சட்டம் இருக்க வேண்டும்.
கல்வி என்பது ஒரு புனிதமான நிறுவனம். மனம் பள்ளியில் தான் பண்படுத்தப்படுகிறது. நல்ல குடிமக்களை உருவாக்குவதற்கு பள்ளிகள் ஒரு புனிதமான இடம். கல்வியின் நோக்கம் மக்களை ஒழுக்கப்படுத்துவதும், சமூகமயமாக்குவதுமாகும்.
கல்வி என்பது ஒருவனை அச்சமற்றவனாக மாற்றுகிறது. ஒற்றுமையின் பாடத்தை கற்பிக்கிறது. அவனது உரிமைகளைப் பற்றி அவனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. அவனது உரிமைகளுக்காக போராடத் தூண்டுகிறது.
அரசியல் இயக்கங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு கல்வியை பரப்புவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கல்வி என்பது புலியின் பால். அதைக் குடிப்பவர் கண்டிப்பாக புலியைப் போல் உறுமுவார்.
பெண்கள் அடைந்த முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்.
உண்மையான கல்வி நம்மை பயமுறுத்துவதற்கு பதிலாக பகுத்தறிவு உள்ளவர்களாக மாற்றும்.
உங்களிடம் இரண்டு ரூபாய் இருந்தால் ஒரு ரூபாயை உணவுக்கும், ஒரு ரூபாயை புத்தகத்திற்கும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உணவு உங்களுக்கு வாழ உதவும், ஆனால் எப்படி வாழ வேண்டும் என்பதை புத்தகம் கற்றுக் கொடுக்கும்.
கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி. நேரம் வரும்போது பசியுடன் இருங்கள்; ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுங்கள்.
மாணவர்கள் கற்கும்போது அவர்களுக்கு முன்னால் 'கற்றல்' என்ற ஒரே ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்.
கல்வி கற்றதால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தமல்ல. கல்வியின் முக்கியத்துவத்தில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கல்வியுடன் ஒழுக்கமும் மேம்பட வேண்டும். ஒழுக்கமில்லாமல் கல்வியின் மதிப்பு பூஜ்ஜியமாகும்.
ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ள விரும்பினாலும், அவர் அறிவு கடலின் நீரில் மண்டியிடும் அளவுக்குத் தான் செல்ல முடியும்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கல்வி மிக முக்கியமான ஆயுதம். வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றத்திற்கு கல்வியே திறவுகோல்.