ச. நாகராஜன்
விமர்சனத்திலிருந்து தப்ப முடியுமா? தப்புவதற்கு என்ன செய்வது? ஓ, முடியுமே! விமர்சனத்திலிருந்து நீங்கள் தப்பவேண்டுமென்றால் ஒரு வேலையையும் செய்யக் கூடாது. ஒன்றும் பேசக் கூடாது. ஒரு மனிதனாக கூட இருக்கக் கூடாது. – எல்பர்ட் ஹப்பர்ட்
நம்மை எல்லையற்றவராகச் செய்வது எது?
கற்பனா சக்தி நம்மை எல்லையற்றவராகச் செய்கிறது. - ஜான் மூர்
எவ்வளவு சுமையை ஒருவன் தூக்க முடியும்?
சுமையின் அளவு குதிரையின் வலிமையைப் பொறுத்தது. – தால்முட்
வணிகம் எப்படிச் செய்ய வேண்டும்?
சகோதரர்கள் போலச் சேர்ந்து வாழுங்கள்; அன்னியர்கள் போல வணிகம் செய்யுங்கள். – அராபிய பழமொழி
யாரைத் தவிர்க்க வேண்டும்?
மூன்றை நீங்கள் தவிர்ப்பது மிகவும் சிறந்தது. 1) தெரு நாய் 2) பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் 3) தனக்கு எல்லாம் தெரியும் தான் ஒரு மேதாவி என்று நினைப்பவன். – வேல்ஸ் பழமொழி
எவன் திறமையுள்ளவன்?
எவன் ஒருவன் தான் திறமையுள்ளவன் என்று நினைக்கிறானோ அவன் திறமையுள்ளவனே. – வர்ஜில்
எவன் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டான்?
முட்டாளும் செத்துப்போனவனும் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். - ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவெல்
வெற்றிக்கான முதல் விதி எது?
தன்னை நம்புவதே வெற்றி பெறுவதற்கான முதல் விதி. – ரால்ப் வால்டோ எமர்ஸன்
எதற்கு விதி தேவையில்லை?
நேர்மைக்கு விதியே தேவையில்லை. - ஆல்பர்ட் காமஸ்
அதிர்ஷ்டம் யாருக்கு வரும்?
தைரியசாலியையே அதிர்ஷ்டம் தேடி வரும். – வர்ஜில்
யாருடைய தவறை மன்னிக்கக் கூடாது?
தன்னுடைய தவறைத் தவிர மற்ற அனைவருடைய தவறையும் மன்னிக்கலாம். - மார்கஸ் போர்ஸியஸ் கேடோ
சோதனை வரும் போது எது முக்கியம்?
சோதனைக்காலத்தில் ஒரு அவுன்ஸ் விசுவாசமானது ஒரு பவுண்ட் புத்திகூர்மையை விட மேல். – எல்பர்ட் ஹப்பர்ட்
வெற்றி அளக்கப்படுவது எப்படி?
இலக்கை நோக்கிக் குறிபார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது. இலக்கை நோக்கி தவறாமல் அம்பை எய்து விட வேண்டும். அது தான் வெற்றியின் அடையாளம். - இத்தாலிய பழமொழி
எதற்குக் கெட்ட காலம் கிடையாது?
நல்ல கருத்துக்களுக்கு கெட்ட காலமே கிடையாது. ஹெச். - கார்டன் செல்ஃப்ரிட்ஜ்
எப்படி மற்றவருடன் பழகுவது?
ஒருபோதும் காது கேளாதவனிடம் முணுமுணுக்காதே; கண் தெரியாதவனிடம் கண் சிமிட்டாதே! அவ்வளவு தான்! - ஸால்வேனியா பழமொழி