இந்திராணி தங்கவேல்
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றிருந்த அரவிந்தர்க்கு சிஷ்யையாக இருந்து பணிபுரிந்தவர் ஸ்ரீ அன்னை அவர்கள். அவர்கள் இந்தியாவைப் பற்றி கூறும் கருத்துகளை இதில் காண்போம்!
இந்தியாவின் அந்தராத்மா ஒன்று, அதை பிளக்க முடியாது. பாரதமாதா தனது உலகப் பணியை உணர்ந்திருக்கிறாள். அதை வெளிப்படுத்துவதற்கு வேண்டிய புறச்சாதனங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.
இந்தியா என்பது மலைகளும் ஆறுகளும் கொண்ட ஒரு நிலப்பகுதியையோ அங்குள்ள மக்கள் கூட்டத்தை மட்டுமோ குறிப்பது இல்லை. இந்தியா ஒரு உயிருள்ள ஜீவன். அவள் ஒரு தேவி. சிவனைப் போல் அவளும் ஒரு தெய்வமாவாள்.
உலக நன்மைக்காக இந்தியா காப்பாற்றப்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் மட்டுமே அமைதிக்கும் புதியதோர் உலக அமைப்பிற்கும் இப்புவியை இட்டுச் செல்ல முடியும்.
ஓ இந்தியாவே! ஆன்ம ஞானத்திற்கு இருப்பிடமான புண்ணிய பூமியே! உண்மையான உலகப் பணிக்கு விழித்தெழுந்து ஒற்றுமைக்கு வழிகாட்டு.
இறை சக்தி ஒன்றே இந்தியாவுக்கு உதவ முடியும். இந்தியா முழுமையான தெய்வ வாழ்க்கையை உலகிற்கு உணர்த்தும் பொருளாக ஆகும்போதே அவள் உலகில் தனக்குரிய இடத்தைப் பெறுவாள்.
உன் அந்தராத்மாவை உணர்ந்துக் கொள். உன் அந்தராத்மா பாரதத்தின் ஆன்மாவில் தீவிர ஈடுபாடு கொள்ளட்டும். தொண்டு மனப்பான்மையுடன் அதற்காக ஆர்வமுறு. முழு உள்ளத்தோடும் நேர்மையோடும் முயன்றால் நீ வெற்றி காண்பாய்.
மனித இனம் புத்துயிர் பெறுவதும் இன்றுள்ள வாழ்வை விட மேலான உண்மையான வாழ்விற்கு உயிர்த்தெழுவதும், இந்திய மண்ணிலேயே நிறைவேறப் போகிறது.
அந்தராத்மாவின் தர்மத்தின் படி ஆட்சி நடக்கக்கூடிய நாடு இந்தியாவே. அதற்குரிய காலமும் வந்துவிட்டது. மேலும் அந்த வழியில் தான் இந்த நாட்டிற்கு விமோசனம் பிறக்க முடியும்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதன் உணர்வு அன்னியர் ஆதிக்கத்தின் செல்வாக்கினால் கோணலாக்கப்பட்டுள்ளது .
ஆனால் எப்படி என்னவானாலும் இந்நாடு இணையற்றதொரு பாரம்பரியத்தைப் பெற்றுள்ளது என்பது தெளிவு.
வெகு காலமாக பிரிவினை மூலமும் எதிர்ப்பு மூலமும் ஆட்சி புரிவது வழக்கமாகிவிட்டது. ஒற்றுமை, பரஸ்பர நம்பிக்கை இவைகள் மூலம் ஆட்சி செய்யும் காலம் வந்துவிட்டது.
உனது சின்னஞ்சிறு அகங்கார ஜீவனை விலக்கிவிட்டு, விரிவாக வளர்ந்து பாரத அன்னையின் தகுதி வாய்ந்த குழந்தையாகு. உனது கடமைகளை நேர்மையுடனும் உண்மையுடனும் நிறைவேற்று. இறைவனின் அருளில் அசையாத நம்பிக்கையுடனும், எப்போதும் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இரு.
படைப்பு முழுவதிலும் இப்புவி தனிச் சிறப்பு வாய்ந்தது. இப்புவியிலும் இந்தியா தனிச்சிறப்பு பெற்றது. இது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாகும்.
இந்தியாவையும் உலகத்தையும் காப்பாற்றுவதற்கு வேண்டிய ஆன்ம ஞானத்தைக் கொண்ட ஒரு கூட்டம் இருக்க வேண்டும். அவர்கள் வலுவுள்ள ஒன்றுபட்ட இச்சா சக்தியாக வேலை செய்ய வேண்டும். உலகில் பேருண்மையைக் கொண்டு வரக்கூடியது இந்தியா ஒன்றே.
இறைவனது சித்தத்தைப் பின்பற்றினால் இந்தியா ஆன்மீக மலையின் சிகரத்தில் இருந்து கொண்டு ஒளி வீசி உண்மையின் வழியைக் காட்டி ஐக்கியத்தை உருவாக்க முடியும்.
இயற்கை உன் மீது சுமத்தி இருந்த சூழ்நிலைகள் என்னும் சுமையைத் தாங்கமாட்டாமல் தாங்கிக் கொண்டு சிரமத்துடன் செல்வதற்குப் பதில், இப்போது சுதந்திரமாகவும் விரைவாகவும் சிரமின்றியும் முன்னேறுவாய்.