கே.எஸ்.கிருஷ்ணவேனி
சூரியன் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு செல்வதுதான் மீன மாசம் அதாவது பங்குனி மாதம். பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்துவரும் நாள்தான் பங்குனி உத்திரம்.
12 வது மாதமான பங்குனியும் 12வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் இது. இந்நாளில் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
பங்குனி உத்திர நாளன்று குழந்தை பாக்கியம் வேண்டி வள்ளிக்கு மாவிளக்கு ஏற்றி வணங்குவதும், முருகனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுப்பதும் பிரார்த்தனை.
பங்குனி உத்திரத்தன்று புதுத் தாலியை பெருக்கி கட்டிக்கொள்வது திருமணமான பெண்களின் வழக்கம்.
இன்னாளில் தான் திருமகள் விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம் பிடித்ததாகவும், கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
பார்கவ மகரிஷியின் மகளாக மகாலட்சுமி பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்தநாளும் பங்குனி உத்திர திருநாளில்தான்.
இந்நாளில் ‘கல்யாணசுந்தர விரதம்’ இருந்து வழிபட, திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.
தர்ம சாஸ்தா ஐயப்பனாக அவதரித்த தினம் பங்குனி உத்திர நாளில்தான்.
காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளை பெற்ற நாளும் இந்தப் பங்குனி உத்திர திருநாளே.
முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்த நாள் என்பதால் பங்குனி உத்திர திருவிழா முருகன் கோயில்களில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
ராமர் சீதையை மணந்ததும், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோருக்கும் திருமணம் நடைபெற்ற நாளும் பங்குனி உத்திர நன்னாளில்தான்.
ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்ததும் இந்த பங்குனி உத்திர நாளில்தான்.
சொக்கநாதர் அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர திருநாளில்தான். சுந்தரருக்கு மதுரையில் சிவபெருமான் அன்னை பார்வதி தேவியோடு மணக்கோலத்தில் காட்சி அளித்த நாளும் இதுவே.
அர்ஜுனன் பிறந்த தினமும் பங்குனி உத்திரம் தான். மிகவும் விசேஷமான தினம் இது.
இன்றைய நாளில் பூ முடித்தல், தாலிக்கு பொண்ணு உருக்குதல், திருமண ஓலை எழுதுதல், சீமந்தம், புதிய பொருட்கள் வாங்குதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்கு உகந்த நாள் இந்த பங்குனி உத்திர திருநாளே.
அன்று தானம் செய்ய வேண்டிய பொருட்கள்: மங்கள பொருட்களான மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு ஆகியவற்றை பங்குனி உத்திர நன்னாளில் தாம்பூலமாகக் கொடுப்பது சிறந்தது.
பசு மாட்டிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் கொடுப்பது. காக்கைக்கு எள் கலந்த அன்னம் இடுவதும் சிறப்பு.
சர்க்கரை பொங்கல் அல்லது பஞ்சாமிர்தம் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்து 10 பேருக்காவது அந்தப் பிரசாதத்தைக் கொடுப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது.