கே.எஸ்.கிருஷ்ணவேனி
ஆடிப்பெருக்கு என்பது தமிழர்களின் கலாச்சார திருவிழா. இதில் விவசாயத்திற்கு ஆதாரமான தண்ணீரை போற்றும் விதத்தில் விழா எடுக்கப்படுகிறது. ஆடிப்பெருக்கு என்பது நீரோடும் நிலத்தோடும் தொடர்புடைய அறிவியல் பூர்வமான விழாவாகும்.
பொன்னியின் செல்வன் நாவலில் ஆடிப்பெருக்கு குறித்த கல்கியின் விஸ்தாரமான விவரிப்புகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். வீராணம் ஏரிக்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாட்ட காட்சிகளை மிக அழகாக விவரித்திருப்பார்.
ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வயோதிகர்களும் கூட புத்தம் புது ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள் என்றும், கூட்டாஞ்சோறு, சித்ரான்னம் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள் என்று பலவகையான வர்ணனைகள் செய்துள்ளார்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு வல்லவராயன் வந்தியத்தேவன் அங்கே நின்று அவர்கள் பாடும் ஓட பாட்டையும், வெள்ளப்பாட்டையும், கும்மியையும் காது கொடுத்து கேட்டான் என்று கல்கி அவர்கள் சுவாரசியமாக ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்தை வர்ணிக்கிறார்.
நீரின்றி அமையாது உலகு என்பதை உணர்த்த நம் முன்னோர்கள் அதை போற்றுவதற்கும், நன்றி கடன் செலுத்துவதற்கும் காலம் காலமாக இந்த விழாவை கொண்டாடி வருகிறார்கள்.
ஆடிப்பெருக்கு என்பது நீரோடும் நிலத்தோடும் தொடர்புடைய அறிவியல் பூர்வமான விழாவாகும். காவிரி பாயும் பகுதிகளில் இந்த விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும்.
விவசாயிகள் பொங்கல் விழாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஆடிப்பெருக்குக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
விதைகள் விதைப்புக்கான நீர் ஆதாரம் ஆடி மாதத்தில் இருந்துதான் கிடைக்கத் தொடங்கும். தென்மேற்கு பருவமழையால் இந்த மாதத்தில் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படும்.
"தாயைப் பழித்தாலும் நீரைப் பழிக்காதே" என்ற சொல்லாடல் இன்றும் கிராமப்புறங்களில் சொல்லப்படுவதுண்டு. தண்ணீரைப் போற்றி வணங்குவதற்காக பிரத்தியேகமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
'வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர, குடி உயரும் குடி உயர, கோண் உயரும்' என்ற அவ்வையாரின் பாடலும் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
விவசாயிகள் தாங்கள் பயிரிடப் போகும் பயிர்களின் விதைகளின் முளைப்புத்திறனை சோதித்துப் பார்க்கக் கூடிய நாளாக இந்த ஆடிப்பெருக்கு இருந்துள்ளது.
சிறிதளவு விதைகளை முளைக்க வைத்து ஆடிப்பெருக்கன்று நீர்நிலைகளில் முளைப்பாரி விடுவது வழக்கம்.
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தண்ணீரில் விடும் முளைப்பாரிகள் (நெல் மற்றும் நவதானியங்கள்) நீரில் கலந்து உரமாகி நிலத்தை வளப்படுத்தும்.
ஆற்றங்கரையில் அரிசி மாவு மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றி வழிபடுவதும், காதோலை, கருகுமணி, பூக்கள் சேர்த்து கரைபுரண்டு ஓடும் ஆற்றில் விடுவதும், கலந்த சாதம் எனப்படும் சித்திரான்னங்கள் செய்து குடும்பத்துடனும் நண்பர்களுடனும் உண்பதும் நடைபெறும்.
பொதுவாக ஆடிப்பெருக்கன்று புதுமணப் பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக் கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதனால் கணவரின் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.