கே.எஸ்.கிருஷ்ணவேனி
உலக மக்களை காப்பதற்காக அன்னை சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். ஆடிப்பூர விழா சைவ ஆலயங்கள் மட்டுமல்லாது வைணவ ஆலயங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும்.
சூடிக்கொடுத்த சுடர்கொடியாளை ஆடிப்பூர நாளில் தரிசனம் செய்ய ஆனந்தமான வாழ்வு அமையும். திருமணம் கைகூடும்.
ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம். பூமி பிராட்டியின் அவதாரம் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தாள். எனவே இந்த நாளில் ஆண்டாளையும் பெருமாளையும் வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த நாளில் திருத்தேர் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். ஆண்டாள் ரங்க மன்னாருடன் திருத்தேரில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆடிப்பூர நாளில் திருப்பாவை 30 பாசுரங்களையும் பாராயணம் செய்வது நல்லது.
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நன்னாளில் ஆண்டாளுக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வது வழக்கம். ஆண்டாள் பாடிய 'வாரணமாயிரம்' என்ற பாடலை பாடி ஆண்டாளை வணங்க விரைவில் திருமண பாக்கியமும் குழந்தைப் பேறும் உண்டாகும்.
சித்திரை திருவிழாவில் அணிய மாலை கொடுத்தனுப்பும் ஆண்டாளுக்கு, ஆடிப்பூரத்தில் உடுத்துவதற்கு பட்டுப் புடவையும் மங்களப் பொருட்களையும் பரிசாக அனுப்பி வைப்பார் கள்ளழகர்.
பாவை நோன்பு இருந்த ஆண்டாள் தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்து வைத்தால் அக்காரவடிசலும், வெண்ணையும் படைப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக் கொண்டாள்.
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருடன் ஆண்டாள் நாச்சியார் ஐக்கியமான பிறகு கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணையும் சமர்ப்பிக்க முடியாமல் போனது. பின்னாளில் வந்த ராமானுஜர் இது பற்றி கேள்விப்பட்டு ஆண்டாள் வேண்டிக் கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணையும் கள்ளழகருக்கு சமர்ப்பித்தாராம்.
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின் போது மதுரைக்கு வரும் கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் தான் சூடிக் களைந்த மாலையை கொடுத்தனுப்புவார்.
அந்த மாலையையும் கிளி உள்ளிட்ட மங்கலப் பொருட்களையும் அணிந்து கொண்டுதான் தங்க குதிரை ஏறி வைகையில் எழுந்தருளுவார் கள்ளழகர். அதற்கு பிரதிபலனாக ஆண்டுதோறும் ஆடிப்பூரம் நாளில் பிறந்தநாள் பரிசாக பட்டுச் சேலை கொடுப்பார்.
மதுரை கள்ளழகர் கோவிலிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்வது பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இன்று எத்தனையோ புதிய பட்டு வஸ்திரங்கள் இருந்தாலும் கள்ளழகர் கோவிலில் இருந்து வந்த பட்டு வஸ்திரம், மாலையை மட்டும் ஆண்டாளுக்கு அணிவிப்பது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆடிப்பூரம் நன்னாளில் அவதரித்த ஆண்டாள் நாச்சியாருக்கு அழகர் கோவிலில் இருந்து பெருமாள் உடுத்திக் களைந்த பட்டு வஸ்திரம், பூமாலை, முக்கனிகள், துளசி மாலை, பழங்கள், பலகாரங்கள் போன்றவை மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்களாக ஊர்வலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மடியில் ரங்க மன்னார் சயன சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.