கண்மணி தங்கராஜ்
உலகப் பிரசித்தி பெற்ற இந்து வழிபாட்டுத் தலங்களுள் சபரிமலை ஐயப்பன் கோயிலும் ஒன்று. இக்கோயில் கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 18 மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இதனுடைய மொத்த உயரம் 468 மீட்டர் (1535 அடி) ஆகும்.
உலகளவில் வருடந்தோறும் ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது அதிகம்தான். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் நூறு மில்லியன் பக்தர்கள் இங்கு பயணம் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
சபரிமலை கோயில் இந்தியாவின் முன்னணி பணக்காரக் கோயில்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் இந்தக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களால் இங்கு பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு அதிகளவிலான பணம் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது.
சராசரியாக ஒரு தலைமை அர்ச்சகரின் வருமானம் 56 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஐயப்பனுக்கு சமர்ப்பிக்கப்படும் உணவுதான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமாக வழங்கப்படுகிறது.
நெய், அரிசி, வெல்லாம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் அரவணப் பாயசம், அப்பம் போன்றவை கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. மேலும், இந்த பிரசாத உணவுகள் அனைத்தும், கேரள மக்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படும் உள்ளூர் உணவாகும்.
ஐயப்பனின் பிரதான சன்னிதிக்கு அருகே ஒரு முஸ்லிம் துறவியான ‘வாவருக்கு’ உரிய மசூதி அமைந்துள்ளது. வாவர், ஐயப்பானின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்றும் மகிஷி என்ற அரக்கனைக் கொல்ல அவருக்கு உதவினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களும் வாவரின் மசூதியில் வழிபட்டு அருள் பெறுகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிக்கட்டுகள் மிகவும் விசேஷமானது. இந்தப் படிக்கட்டுகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டு, கவசத்தால் மூடப்பட்டு அமைந்துள்ளன.
இந்த 18 படிகளும் மனித வாழ்க்கை மற்றும் 18 வகையான குணங்களை குறிக்கின்றன. அவற்றில் தீயவற்றை நீக்கி, நல்லனவற்றை சேர்க்க வேண்டும் என்பதே 18 படிகளின் தத்துவமாகும்.
இக்கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு உள்ளே நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்குரிய கடுமையான விதிகளை இக்கோயில் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. ஏனெனில், ஐயப்ப சுவாமி ஒரு பிரம்மச்சாரியாம்.
இந்தக் கோயிலுக்குச் செல்வதற்கு முன்பாக கடுமையான வாழ்க்கை முறையைப் ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுவர். பிரம்மச்சரியம், சைவ உணவு, முடி மற்றும் நகங்களை வெட்டாமல் இருப்பது, அதிக வசதியின்றி தரையில் தூங்குவது ஆகியவை இந்த விரத காலத்தின் முக்கிய அம்சங்களாகும்.
ஐயப்ப பக்தர்கள் காவி, கருப்பு மற்றும் நீல நிற உடையைத்தான் அதிகமாக உடுத்துவர். சபரிமலை செல்ல நினைப்பவர்கள் துளசி மாலை மற்றும் ருத்ராட்ச மாலையை குருசாமி கையால் அணிவார்கள்.
1950ம் ஆண்டு வழக்கம் போல மாதாந்திர பூஜைக்கு பிறகு கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் அடுத்த மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டபோது, சபரிமலை கோயில் முழுவதும் எரிந்து நாசமாகிக் கிடந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூலஸ்தானம் அழிக்கப்பட்டு உள்ளே சுவாமி ஐயப்பன் சிலை தூள் தூளாக நொறுக்கப்பட்டுக் கிடந்தது.
பின்னர், கோயிலை மறு சீரமைத்தனர். ஐயப்ப சுவாமி சிலையை, மறைந்த தமிழக முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தை பி.டி.ராஜன் தமிழகத்தில்தான் வடிவமைக்கச் செய்துள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையை சேர்ந்த சிற்பக் கலைஞரான ‘ராமசாமி ஸ்தபதி’ வடித்துத் தந்த ஐயப்பன் சிலைதான் தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வழிபாட்டில் உள்ளது.