கண்மணி தங்கராஜ்
தமிழகத்தில் சிதம்பரம் என்ற ஊரில் அமைந்துள்ளது தில்லை நடராஜர் கோயில். இந்த கோயிலானது நடராஜரின் நடனத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பிரமிக்க வைக்கும் பல அதிசயங்களுக்கு சான்றாக விளங்கும் சிதம்பர நடராஜர் கோயில் முதலில் 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. பிறகு கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் மீண்டும் கட்டப்பட்டது.
சுமார் 51 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இக்கோயில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட கோயில்களுள் ஒன்றாகும்.
“பஞ்சபூதங்களில்” சிதம்பரம் நடராஜர் கோயில் “ஆகாயத்தை” குறிக்கிறது.
chidambaram Nataraja Templeஇந்த கோயிலின் சிறப்பு அம்சமாக மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் சந்நிதிகள் அமைத்திருக்கின்றனர்.
மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு சமமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
இக்கோயிலில் ‘நாட்டியாஞ்சலி’ என்ற நாட்டிய விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவ்வாறு செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர்.
இத்தல நடராஜரைக் காண ஏராளமான வெளிநாட்டவர்கள் வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் பிரபஞ்ச நடனமாகும். இது ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
இவர் காலின் கட்டை விரலுக்கு அடியில் தான் பூமியின் மையப்புள்ளி இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
திருக்கோயிலின் முக்கிய அங்கமான விமானத்தின் மேலிருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது. இது ஒரு நாளில் மனிதன் சுவாசிக்கும் மூச்சின் சரியான எண்ணிக்கையாகும்.
மேலும் அக்கூரையில் அடிக்கப்பட்டிருக்கும் 72,000 ஆணிகள் மனித உடலில் ஓடும் 72,000 நாடி, நரம்புகளை குறிப்பதாகும்.
பொற்கூரையின் மேலிருக்கும் ஒன்பது கலசங்கள், நவ சக்திகளைக் குறிக்கின்றன.
இக்கோவிலில் இருக்கும் 9 வாயில்கள் மனித உடலில் இருக்கும் 9 துவாரங்களை குறிக்கின்றன.
அர்த்த மண்டபத்திலுள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும், அந்த மண்டபத்தின் அருகிலுள்ள மண்டபத்திலிருக்கும் பதினெட்டு தூண்கள், பதினெட்டு புராணங்களையும் குறிக்கின்றன.