நவராத்திரி கொண்டாட்டம் – சில தகவல்கள்!

இந்திராணி தங்கவேல்

புரட்டாசி மாதம் வரும் பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரி. நவராத்திரி என்பதற்கு 9 இரவுகள் என்று பொருள். ஒன்பது இரவுகள் கடந்து, பத்தாம் நாளான விஜயதசமியுடன் நிறைவு பெறுகிறது இந்த பண்டிகை. 

மகிஷன் என்னும் அசுரன் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அதிக தொல்லை கொடுத்து வந்தான். அவனை அழிப்பதற்காக அன்னை பராசக்தி ஒன்பது நாட்கள் தவம் இருந்து பத்தாவது நாள் அவனை வதம் செய்தாள். பராசக்தியின் இந்த வெற்றியைக் கொண்டாடுவதுதான் நவராத்திரி. 

நவராத்திரியின்போது ஒவ்வொரு நாளிலும் இரண்டு முதல் பத்து வயது வரை உள்ள கன்னிப் பெண்களை குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி ,ரோகிணி, காளிகா, சண்டிகா, துர்க்கா, சுபத்ரா, சாம்பவி என்று தேவியின் அம்சங்களாக பாவித்து வழிபடுகிறோம். 

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளை வைத்து பூஜிப்பவர்களுக்கு சகல பாக்கியத்தையும் அளிப்பேன் என்று அம்பிகை  கூறுவதாக தேவி புராணத்தில் உள்ளது. 

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா வழிபாடு ஆகும். இவள் வீரத்தின் அதிபதி. 'துர்க்கம்' என்ற சொல் 'அகழி' என்று பொருள் தரும். கோட்டைக்குள் இருப்பவர்களை காக்கும் அகழி போன்று, தன்னை சார்ந்த பக்தர்களை காப்பதால் இவள் துர்க்கை என பெயர் பெறுகிறாள். 

நடு மூன்று நாட்கள் திருமகளாக, அலை மகளாக விளங்கும் லட்சுமியின் வழிபாட்டிற்கு உரியவை. இவள்தான் செல்வத்தின் அதிபதி. 

நவராத்திரி விழாவில் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாட்டிற்கு உரியவை. இவள் கல்விக்கு அதிபதி. ஆயகலைகள் 64 ஐயும் தருபவள். 

நம் நாட்டில் பெண்களை சக்தியின் அம்சமாக நினைக்கிறோம். பராசக்தியை போற்றும் இந்த விழா பெண்களை கொண்டாடும் விழாவாக உள்ளது.

நவராத்திரி விழாவின்போது அர்ச்சனைக்கு வில்வ இலை அல்லது துளசி இலையை பயன்படுத்த வேண்டும்.

நவராத்திரி நாட்களில் வீட்டில் ஊசியை பயன்படுத்தக் கூடாது என்று தேவி புராணம் கூறுகிறது. 

நவராத்திரி விழாவின் முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை சாதமும், அடுத்த மூன்று நாட்கள் சர்க்கரை பொங்கலும், கடைசி மூன்று நாட்கள் வெண்பொங்கல், தயிர் சாதமும் தயார் செய்யலாம்.

பூஜையின்போது அனைத்து அம்மன் பாடல்களையும் பாடலாம். அபிராமி துதியை அடிக்கடி மனதிற்குள் சொல்லிக்கொள்ளலாம். 

முப்பெரும் தேவி தேவியரை வணங்குவோம்! 

வாழ்வில் வியத்தகு முன்னேற்றத்தை அவர் தருவர்!

பொருளாதார சுதந்திரத்தை ( financial freedom) அடைய வழிகள்!