எஸ்.ராஜம்
புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள கீழாத்தூர் எனும் ஊரில் நாடியான் கோவில் உள்ளது. பக்தர்கள் இங்கு கற்களை காணிக்கையாக வழங்குகின்றனர்.
பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் காலில் நோய் உள்ளவர்கள், செருப்பை காணிக்கையாக கொடுக்கின்றனர். கால் நோய்கள் தீருகின்றன.
மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள ஹரி அம்மன் கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேற மணிகளை காணிக்கையாக கட்டுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காட்டு ராணி எனும் கிராமத்தில் உள்ள காவல் தெய்வமான அய்யனார் கோவிலில், பக்தர்கள் செங்கற்களை காணிக்கையாக தருகின்றனர். வாகனங்கள் விபத்துகள் இன்றி செல்ல வேண்டி, வாகன ஓட்டிகள் செங்கற்களை போட்டு விட்டு செல்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் உள்ள வழிவிடு விநாயகர் கோவிலில், வேண்டுதல் நிறைவேற, பக்தர்கள் பத்து காசு மட்டும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் எனும் கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவிலில் மக்கட் பேறு கிடைக்காதவர்கள், குழந்தை பிறந்ததும் நாகநாத சுவாமி காலடியில் குழந்தையை வைக்கிறார்கள். கோவில் நிர்வாகம் குழந்தையை ஏலம் விடுகிறது. குழந்தையின் பெற்றோர்களே ஏலத் தொகையை செலுத்தி விட்டு குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர்.
குருவாயூரப்பன் கோவிலில் சொறி சிரங்கு பாதிப்பு உள்ளவர்கள் சேனைக்கிழங்கை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக்கொண்டு பயன் பெறுகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் செல்லும் வழியில் உள்ள கலிதீர்த்த அய்யனார் கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறினால், தனக்குத்தானே சிலை வைத்து, காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் முத்துலாபுரம் எனும் இடத்தில் உள்ள கோட்டை கருப்பசாமி கோவிலில், தை மாதம் நடைபெறும் திருவிழாவில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, அரிவாள்களை காணிக்கையாக கொடுக்கின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் எர்ணாகுளம் பாதையில் உள்ள திருக்கூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை உள்ளவர்கள் தாம்பு கயிறு துலாபாரம் காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர்.
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை வெள்ளாறு கிராமத்தில், மக்கள் காவல் தெய்வமாக வணங்கி வரும் சேட்டு முனியப்பன் கோவிலில், பிரார்த்தனை நிறைவேறினால் பக்தர்கள், பிளாஸ்டிக் சேர்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதனால் இக்கோவில் முழுவதும் நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் சேர்கள் குவிந்து காணப்படுகின்றன.
உத்திரபிரதேச மாநிலம் சம்பல் மாகாணத்தில் உள்ள பாடலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு பக்தர்கள் துடைப்பங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். குறிப்பாக சரும நோய் உள்ளவர்கள் தங்களுக்கு குணமானவுடன் துடைப்பங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் எனும் ஊரில் உள்ள ஒரு பழங்குடியினர் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறினால் தங்கள் புருவங்களையே காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர். புருவ முடிகளை ஒரு வெள்ளைத் துணியில் சேகரித்து வைத்து, பின்னர் கோவிலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.