எஸ்.ராஜம்
வேதத்தில் அட்சய திருதியையன்று தானம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிட்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் அறிவைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்வது நல்ல பலன் தரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வங்காளத்தில் அன்று 'அல்கதா' என்ற விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் மற்றும் லட்சுமி தேவியை வழிபட்டு, புது வணிகக் கணக்கை எழுதத் தொடங்குவர்.
செல்வத்திற்கு அதிபதியான குபேரன் இந்நாளில் மகாலட்சுமியை வணங்குவார் என்று 'லட்சுமி தந்திரம்' என்ற புராணம் கூறுகிறது. அதனால், அட்சய திருதியை அன்று லட்சுமி குபேர பூஜை செய்வது வழக்கம்.
இந்நாள் வைசாக மாதம் வளர்பிறை திரிதியை அன்று வரும். வேதவியாசர் விநாயகர் உதவியுடன் மகாபாரத காவியத்தை எழுத தொடங்கியது அட்சய திருதியை நாளன்று தான். அன்று லட்சுமி, கணபதி வழிபாடு செய்வது புண்ணியம் தரும்.
பாண்டவர்களின் வனவாசத்தின் போது, நாடி வருவோர்க்கு உணவு வழங்க தருமர் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்று, திரௌபதியிடம் அளித்த நாள் அட்சய திருதியை.
கௌரவர் சபையில் பாஞ்சாலியின் மானம் காக்க 'அட்சய' என்று கண்ணன் கூறி, சேலைகள் வளர அருள் புரிந்தது அட்சய திருதியை நாளில்தான்.
தனலட்சுமியும், தானிய லட்சுமியும் தோன்றிய நாள் அட்சய திருதியை.
குபேரன் ஈசனை வேண்டி வரம் பெற்று நவநிதிகளுக்கு அதிபதியானது அட்சய திருதியை நாளன்றுதான்.
பராசக்தி எடுத்த பல வடிவங்களில் காய், கனி, மூலிகைகளோடு சாகம்பரி தேவியாக தோன்றிய நாள் அட்சய திருதியை.
திருமாலின் அவதாரமான பரசுராமர் அவதாரம் அக்ஷய திருதியை அன்றுதான் நிகழ்ந்தது.
காசி அன்னபூரணி தேவி ஈசனுக்கு படி அளந்த நாள் அட்சய திருதியை.
வசிஷ்டருடன் அருந்ததி சப்தரிஷி மண்டலத்தில் இடம்பெற்றது, அட்சய திருதியை அன்று விரதம் இருந்து தானம் செய்தமையால்தான்.
சென்னை ரத்தினமங்கலம் லட்சுமி குபேரருக்கு அட்சய திருதியை அன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
தஞ்சாவூர் விளாங்குளத்தில் உள்ள அட்சய புரீஸ்வரரையும், அபிவிருத்தி நாயகியையும் அட்சய திருதியை அன்று வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 16 கருட சேவை புகழ்பெற்றது.
திருவானைக்காவல் கிழக்கு கோபுரத்தில் உள்ள குபேர லிங்கம் அட்சய திருதியை அன்று சிறப்பாக பூஜிக்கப்படுகிறது.
சீர்காழி கோதண்டராமர் கோவிலில் அட்சய திருதியையன்று உதய கருட சேவையின் போது, ஸ்ரீனிவாசரையும், ராமபிரானையும் ஒன்றாக தரிசிக்கலாம்.