ஆர்.ஜெயலட்சுமி
எல்லா துன்பங்களுக்கும் அகந்தையே மூலம். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களால் இன்ப துன்பங்கள் உண்டாகின்றன என்பது போலி உணர்வு.
பக்தி இல்லாமல் மேலெழுந்த வாரியாக நாமத்தை சும்மா உச்சரிக்க கூடாது. கடவுள் பெயரை உச்சரிப்பதானால் நாம் நம்மை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து அவரை அழைக்க வேண்டும்.
ஆத்மாவின் இயற்கையான நிலைச் சாந்தி தான் எங்கும் வியாபித்திருக்கிற பரமாத்மா சாந்தி பெருங்கடல் அதனிடையே உள்ள ஆத்மாவும் சாந்தியை உடையதுதான்.
மனம் என்று ஒரு பொருள் இல்லை, எண்ணங்களின் உருவம் அது. மனமென்பது என்னவென்று உள் நுழைந்து நோக்கினால் உண்மையில் மனமென்று ஒன்றையும் காணோம். இப்படி மனம் இருந்தால் சாசுவதமான சாந்தி விளங்கும்.
திரையைப் பார்க்காமல் சித்திரங்களை மாத்திரம் பார்த்து மக்கள் பிரமிப்பது போல, அஞ்ஞானி ஆத்மாவை மறந்து உலகமே மெய் என்ற பிரமையை அடைகிறான். திரையில்லாவிட்டால் படமும் இல்லை என்ற அறிவு வந்தது போல், ஆத்மா இல்லாவிட்டால் உலகம் இல்லை என்ற அறிவு வரவேண்டும்.
ஆத்ம ஞானம் என்பது புதிதாக ஒரு பொருளை அடைந்து இன்புறுவது அல்ல. உன்னிடம் உள்ள அஞ்ஞான திருஷ்டி போய்விட்டால் ஆத்ம ஞானம் தானே வெளிப்படும். ஆத்மாவாகவே நீ இருக்கிறாய் என்ற உண்மையை நீ உணர வேண்டும்.
மனதிற்கு தன் நிலையில் பிடிப்பு ஏற்படுகிற வரையில் விடாமல் தியானம் புரிய வேண்டும். தியானம் ஸ்திரப்பட வேண்டுமானால் ஏதேனும் பாவனையிலே ஊன்றி நிற்க வேண்டும். இல்லாவிட்டால் மனம் பல பொருள்களை நாடிச் செல்லும்.
குருவின் திருவருளினால் ஆத்ம தரிசனம் உண்டாகிறது. குரு உள்ளேயும் இருக்கிறார் வெளியிலும் இருக்கிறார். வெளியில் இருந்து மனம் உள் முகமாகும்படித் தள்ளுகிறார். உள்ளிருந்து மனத்தை வசம் இழுத்து அமைதியை உண்டாக்குகிறார். இதுதான் குரு கிருபையாகும்.
ஆத்மாவானது ஜாக்ரம் சொப்பனம் சுஷூப்தி என்ற மூன்று அவஸ்தையிலும் முறையே கண், கழுத்து, இருதயம் என்ற மூன்று இடங்களையும் தலைமையாகக் கொண்டு போகங்களை நுகர்கிறது.
ஆத்மா எல்லா தேகத்துக்குள்ளும் இருக்கிறது. ஆத்மா இருட்டும் பிரகாசமும் இல்லாத சுயஞ்ஜோதியாய் தன்மையமாய் விளங்கும் மனதை ஆத்மாவினை கொண்டு போய் பயமடைய செய்துதான் ஆத்மானந்தம் பெற ஏற்ற வழியாகும்.
ஞானிக்கு உறக்கமும் விழிப்பும் ஒரு பொதுவான நிலையில் இருக்கின்றன. அவன் தூங்கும் போதே விழித்துக் கொண்டிருக்கிறான், விழிக்கும்போதே தூங்குகிறான். மற்றவருடைய விழிப்பு உறக்கம் என்ற இரண்டு நிலைக்கும் ஞானி நிலைக்கும் வேறுபாடு உண்டு.
ஸ்தூலம், சூக்ஷ்மம், காரணம் என்னும் மூன்று தேகங்களையுடையது அகந்தை. நம்முடைய விசாரம் அகந்தையையே சார்பாக கொள்ளுமானால் ஆத்ம ஞானம் வராது.