எஸ்.ராஜம்
திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர் கோவிலில் சரஸ்வதி தேவிக்கு தனி சந்நிதி உண்டு. இங்கு வழங்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் சிறப்பானது.
வாணியம்பாடியில் சரஸ்வதிக்கு தனி கோவில் உள்ளது இவர் ஞான சரஸ்வதி ஆக போற்றப்படுகிறார். வாணி கோவில் கொண்டுள்ளதால், ஊரின் பெயர் வாணியம்பாடி ஆனது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரில் உள்ள சிவ கிருஷ்ணா கோவிலில் சரஸ்வதி தேவிக்கும், பிரம்மாவுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சென்னை போரூர் மதனானந்தபுரத்தில் உள்ள துர்கா லட்சுமி சரஸ்வதி கோவிலில் தனி சந்நிதியில், அன்ன வாகனம் முன்னே நிற்க, சரஸ்வதி காட்சி தருகிறாள்.
சென்னை சோழிங்கநல்லூர் பிரத்தியங்கரா கோவிலில், நீல சரஸ்வதி எனும் பெயரில் சரஸ்வதி தரிசனம் தருகிறாள்.
தஞ்சாவூர் கண்டியூரில் உள்ள பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவிலில், பிரம்மாவுடன் சரஸ்வதி காட்சி தருகிறாள்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சரஸ்வதியின் பெயர் யாழைப் பழித்த மொழியாள். கையில் வீணை இல்லாமல் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், சரஸ்வதி எட்டுக்கைகளுடன் ராஜசியாமளா என்ற பெயரில் தரிசனம் தருகிறாள்.
கேரள மாநிலம் பாலக்காடு கொடுஞ்திறப்புள்ளி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சரஸ்வதி பூஜை அன்று நவமி விளக்கு திருவிழா நடைபெறுகிறது. அன்று கோவில் முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். நகர் முழுவதும் விளக்குகள் ஏற்றி யானைகள் ஊர்வலம் நடைபெறும்.
கூத்தனூரில் தனி கோவில் கொண்டுள்ள சரஸ்வதி தேவி கவிச்சக்கரவர்த்தி கம்பருக்காக கிழங்கு விற்கும் மூதாட்டியாகவும், இடையர் குலப் பெண்ணாகவும் நேரில் வந்து காட்சி தந்திருக்கிறாள்.