கே.எஸ்.கிருஷ்ணவேனி
ஜென் என்பது ஒரு வாழ்வியல் தத்துவம். இது எந்த கொள்கையையும் வலியுறுத்தாது. மாறாக வாழ்க்கையை வாழ்வது குறித்த தரிசனத்தை உருவாக்கும்.
நமக்கு திருக்குறள் எப்படியோ அது போல் ஜப்பானியர்களுக்கு, சீனர்களுக்கு, திபெத்தியவர்களுக்கு ஜென் தத்துவம். மிகக் குறைவான வரிகளில் பெரிய தத்துவங்களை சொல்வது தான் ஜென் தத்துவம்.
ஜென் தியான பயிற்சியை வலியுறுத்துகிறது. ஜென் என்ற சொல் ஜப்பானிய உச்சரிப்பிலிருந்து பெறப்பட்டது.
ஜென் ஒரு பௌத்த துறவற சூழலில் உருவாக்கப்பட்டது. பெரும்பாலான ஜென் மாஸ்டர்கள் பௌத்த மடாலயங்களில் வாழும் பௌத்த மடாலய குறியீட்டில் நியமிக்கப்பட்ட பௌத்த துறவிகளாவர்.
பெரும்பாலான ஜென் மடங்கள், மையங்கள், பல்வேறு சடங்குகள், சேவைகள் போன்றவற்றை செய்கின்றன. அவை எப்போதும் வசனங்கள் சூத்திரங்களின் கோஷத்துடன் இருக்கும். சில ஜென் தத்துவங்களைப் பார்ப்போம்.
உண்மையான வார்த்தைகள் அழகாக இருக்காது. அழகான வார்த்தைகள் உண்மையாக இருப்பதில்லை.
அறிவு என்பது தினமும் எதையாவது கற்றுக் கொள்வது. ஞானம் என்பது தினமும் எதையாவது கைவிடுவது.
மலையை மூடுபனி மறைக்கிறது. ஆனால் மலை இன்னும் அங்கே தான் இருக்கிறது.
எப்போதெல்லாம் சாத்திய படுகிறதோ அப்போதெல்லாம் அன்பாக இருங்கள். எப்போதும் அன்பாக இருப்பது சாத்தியமே என்று நம்புங்கள் !
மனிதன் தன் சொந்த நிழலில் நின்று கொண்டே ஏன் இருட்டாக இருக்கிறது என்று கவலைப்படுகிறான்!
நடந்து கொண்டே இரு... பாதை தானாக உருவாகும்!
உன்னை நீயே மறக்கப் பழகு. பின் பிரபஞ்சத்துடன் நீ ஐக்கியமாகி விடுவாய்.
தனக்குத் தானே கோபம் கொள்கிறவனே சிறந்தவன். சாதாரண மனிதன் தான் பிறர் மீது கோபம் கொள்வான்.
வெறுக்கத்தக்க எண்ணங்களிலிருந்து எவரெல்லாம் விடுதலை பெறுகிறார்களோ அவர்களுக்கே அமைதி கிட்டும்.
உண்மைக்கு அகம், புறம், இடைப்பட்ட நிலை என எதுவும் இல்லை.