சென்னையை சுற்றிப்பார்க்க போறீங்களா? இந்த 10 இடங்களை பாருங்க முதல்ல!

சேலம் சுபா

வந்தாரை வாழவைக்கும் சிங்காரச் சென்னைக்கு வயது 384! சுற்றுலாவுக்கு ஏற்ற தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையை சுற்றிப்பார்க்க போறீங்களா ? அப்ப கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய இந்த 10 இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

இந்தியாவின் மிக நீளமான உலகின் 2வது பெரிய மெரீனா கடற்கரையானது, 12 கிலோ மீட்டர் நீளத்தில் தெற்கில் பெசன்ட் நகர் முதல் வடக்கில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை பரந்த மணற்பரப்பில் சிறியவர் முதல் பெரியவர் வரை சென்று மகிழ ஏற்றது.

எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற மிக பழமையான, சுவாரஸ்யமான அருங்காட்சியகத்தை கண்டிப்பாக பாருங்கள். 1851 ல் நிறுவப்பட்ட இதில் கி மு.1000 வருடங்கள் முன் இருந்த சிற்பங்கள் மற்றும் புராதனங்களை பார்த்து வியக்கலாம்.

வண்டலூர் பூங்கா எனப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைப் பார்க்க குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள். இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவான இது எளிதாக செல்ல ஏற்ற இடம்.

தமிழ்நாட்டின் கலாச்சார மையமாக தமிழை உலகறியச் செய்த வள்ளுவரின் நினைவாக கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம். இங்குள்ள 39 மீட்டர் உயர சிற்பமும் அழகிய தேர்வடிவ கட்டிடக்கலையையும் பிரமிக்க வைக்கும்.

ஆன்மிகப் பிரியர்களுக்கு ஏற்ற இடம் பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவில். அமைதியான சூழலில் தேவியை தரிசித்து அருகில் உள்ள (சினிமாக்களில் பார்த்து ரசித்த) எலியட்ஸ் கடற்கரைக்கும் சென்று மகிழலாம்.

கிறித்துவர்களின் புனிதத்தலமான செயின்ட் தாமஸ் கதீட்ரல் கி.பி.75 ல் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் நியோ கோதிக் முறையில் கட்டப்பட்டு அழகியலின் அம்சமாகத் திகழ்கிறது.

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அவசியம் பாருங்கள். 172 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் புத்தகப் பிரியர்கள் அவசியம் காண வேண்டிய இடம். குழந்தைகளை இங்கு அழைத்துச்சென்று வாசிப்பின் அருமையைப் புகுத்தலாம்.

சென்னையின் எந்த இடத்திலிருந்தும் செல்ல வசதியாக அண்ணாசாலையில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு மசூதி இந்திய முகலாயரின் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இஸ்லாமியர் தலமாகும்.

மெரினாவின் அடையாளமாக இருக்கும் கலங்கரை விளக்கம் இந்தியாவில் நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் ஒரே கலங்கரை விளக்கமாக உள்ளது. பிள்ளைகளுக்கு காட்ட வேண்டியவைகளில் முக்கியமானது.

விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் ECR-ல் உள்ள எம்.ஜி.எம் டிஸ்ஸி வேர்ல்டு. இங்குள்ள நீர் விளையாட்டுகள், ராட்டினங்கள், புதுமையான ரைடுகள் என நாள் முழுவதும் குதுகலிக்கலாம்.

Madras day 2023