வாசுதேவன்
அன்றைய கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் நகர வீதிகளில் ட்ராம்கள் ஓடின. இன்று கொல்கத்தா நகரத்தில் மட்டும் தான் ட்ராம்களை காணலாம்.
அவற்றில் பயணம் செய்வதே அலாதியான அனுபவம். பயணம் செய்தவர்களுக்கு தான் தெரியும், புரியும்.
முதன் முதலில் குதிரைகள் பூட்டி ட்ராம்கள் ஓட்டப் பட்டன. பிறகு கரியின் உதவியுடன் செலுத்தப் பட்டு வந்தன. இப்பொழுது ட்ராம்கள் மின்சாரத்தினால் இயக்கப் படுகின்றன.
2013 ம் வருடம், கொல்கத்தாவில் ஏசி வசதி கொண்ட ட்ராம்களும் அறிமுகப் படுத்தப்பட்டன. பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்கள் தவிர நாஷிக், கான்பூர், கொச்சி, டெல்லி , பாட்னா ஆகிய இடங்களிலும் ட்ராம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கல்கத்தாவில் முதல் ட்ராம் ஓடியது 24.02.1873 ல். பம்பாயில் 09.05.1874 முதல் ட்ராம் பவனி வந்தது. 1874 ஜூன் மாதத்தில் மெட்ராசில் ட்ராம் சேவை துவக்கப் பட்டது.
முதன் முதலில் குதிரைகளைக் கொண்டு இயக்கப்பட்ட ட்ராம்கள், கட்டுப் படி ஆகாததால், சில காலங்களுக்கு பிறகு நிறுத்தப் பட்டு விட்டன.
முதன் முதலில் ட்ராம்களில் பயணம் செய்ய பம்பாயில் வசூலிக்கப் பட்ட கட்டணம் 3 அனா (12 பைசாக்கள்). டிக்கெட்டுக்கள் கொடுக்கப் படவில்லை. ட்ராம்கள் பிரபலம் அடைந்தவுடன் கட்டணம் 2 அனா (8 பைசவாக குறைக்கப் பட்டது )
பலர் கட்டணம் கொடுக்காமல் பயணிக்க தொடங்கியதும், அதை கட்டுக்குள் கொண்டு வர பயணச் சீட்டுக்கள் (tickets) அறிமுகப் படுத்த பட்டன.
ட்ராம்களை இழுத்துச் செல்லும் கால கட்டத்தில் 1300க்கும் மேற்பட்ட குதிரைகள் இருந்தனவாம்.
அன்றைய பம்பாய் (மும்பை) நகரில் 1920 களில் இரட்டை அடுக்கு (double - decker trams) ட்ராம்கள் வலம் வந்தன.
31.03.1964 அன்று பம்பாயில் ட்ராம் சேவை முடிவுக்கு வந்தது.
பல வழிதடங்களில் மெட்ராசில் ட்ராம்கள் இயக்கப்பட்டு வந்தன. ராயபுரம் - திருவல்லிக்கேணி அதில் முக்கியமானது.
அன்றைய மெட்ராசில் (சென்னை) 12.04.1953 ல் ட்ராம் சேவை நிறுத்தப்பட்டது.
மிகவும் குறைவான வேகத்தில் செல்லும் இந்த வகை ட்ராம்களில் பயணம் செய்ய (குறிப்பாக இந்த வேகம் மிக்க கால கட்டத்தில்) பொறுமை வேண்டும்.
இரண்டு பெட்டிகள் கொண்ட ட்ராம்களில் முதல் பெட்டி முதல் வகுப்பு, பின்னால் இருக்கும் பெட்டி இரண்டாம் வகுப்பு என்று கருதப் பட்டு வந்தது. முதல் வகுப்பு பெட்டியில் உள்ளே நடுவில் மிகவும் பெரிய அகலம் மிக்க மின் விசிறி இருக்கும்.