கல்கி டெஸ்க்
விவேகானந்தர் மண்டபம்; விவேகானந்தர் இந்த மண்டபம் அமைந்துள்ள பாறையில், மூன்று நாட்கள் தவம் புரிந்து, ஞானத்தைப் பெற்றதாக கருதப்படுகிறது. இங்கு தியான மண்டபமும், விவேகானந்தரின் பிரம்மாண்டமான வெண்கலச் சிலையும் உள்ளன.
திருவள்ளுவர் சிலை; 133 அதிகாரங்களுக்கு ஏற்றவாறு, 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு எழுப்பப்பட்டுள்ள சிலை. 2000 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதில் உள்பக்கமாக ஏறி, திருவள்ளுவரின் காலடி வரை செல்ல, அருமையான படியமைப்பு உள்ளது.
குமரி அம்மன் கோவில்; கன்னியாகுமரி என்ற பெயருக்கு காரணமாக விளங்கும் குமரி அம்மன் கோவில் கடற்கரையிலேயே அமைந்துள்ளது. அம்மனின் மூக்குத்தியின் பளபளப்பு நம்மை வியப்பிலாழ்த்துகிறது. சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சன் செட் கடற்கரை; கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை ஒரே இடத்தில் காணமுடியும். இங்கு சூரிய அஸ்தமன கடற்கரையில், காலை, மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
காந்தி மண்டபம்; கன்னியாகுமரி கடற்கரை அருகே அமைந்துள்ளது. குஜராத் பாணியில் கட்டப்பட்டது. இங்கு மகாத்மா காந்தியின் அஸ்தி கலசம் வைத்திருந்து பின்னர், கடலில் கரைக்கப்பட்டது. காந்தியடிகள் சார்ந்த புகைப்படங்கள் அருமையாக பராமரிக்கப்படுகின்றன.
காமராஜ் மணி மண்டபம்; கடற்கரை அருகே, காமராஜ் மணி மண்டபம் உள்ளது. காமராஜ் அவர்களின் அஸ்தி இங்கு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்தது. காமராஜ் நினைவாக மணி மண்டபம் கட்டப்பட்டு, அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை அணை; பேச்சிப்பாறை அணை, பாசனத்திற்கு பெரிதும் உதவுகிறது. பேச்சிப்பாறை அணைக்கு செல்லும் பாதையில், இரு பக்கங்களிலும் உள்ள ரப்பர் தோட்டங்களும், இயற்கை சூழ்நிலைகளும் என்றும் நினைவில் நிற்கும்.
திற்பரப்பு அருவி; 50 அடி உயரத்திலிருந்து விழும், அகலமான திற்பரப்பு அருவி காண்பதற்கு அழகான அருவி. மேலும், குளிப்பதற்கு பல்வேறு வசதிகளும் உள்ளன. அருகிலேயே 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாதேவர் சிவாலயமும் உள்ளது.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள்; இது திவ்யதேசங்களின் ஒன்றாக கருதப்படுகிறது. இங்குள்ள பிரம்மாண்ட அனந்த சயன பெருமாள் நமக்கு விஸ்வரூப தரிசனத்தைப் போன்ற அனுபவத்தை வழங்குகிறார்.
கடற்கரைகள் - முட்டம் கடற்கரை, தேங்காய்பட்டினம் கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை போன்ற அழகிய ரம்மியமான கடற்கரைகள் அருகே அமைந்துள்ளன.
-வெங்கடராமன் ராமசுப்ரமணியன்