ராதா ரமேஷ்
குடும்பத்தோடும் நண்பர்களோடும் சென்று பலவிதமான திகிலூட்டும் அனுபவங்களை கண்டு மகிழும் ஒரு முக்கிய இடங்களில் ஒன்றுதான் இந்த பரம்பிக்குளம்! வாங்க பரம்பிக்குளம் போய் வருவோம்!
உள்ளே நுழையும் போதே பாடும் குயில்கள், ஆடும் மயில்கள், குளிர்ச்சியான காற்று, கண்களுக்கு இதமான பசுமை என பார்ப்போரை வசீகரிக்க வைக்கிறது இந்த பரம்பிக்குளம்!
எங்கு உள்ளது? கேரள மாநிலம் சிற்றூர் தாலுகாவில் உள்ள ஆயப்பாதை எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த பரம்பிக்குளம். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக இங்கு செல்லலாம். பெரும்பாலும் நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே செல்வதற்கு அனுமதி உண்டு.
பொள்ளாச்சியில் இருந்து சேத்துமடை சோதனை சாவடி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாப்சிலிப் வழியாக செல்ல வேண்டும். காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை இங்கு அனுமதிக்கப்படுகிறது.
பார்ப்பதற்கான இடங்கள்:
யானை சவாரி: டாப்ஸ்சிலிப் சோதனை சாவடியை தாண்டி அரைக் கிலோ மீட்டர் தூரம் சென்றால் யானை சவாரி செய்யலாம்.150 ரூபாய் கட்டணத்தில் ஒரு மணி நேரம் யானை சவாரி செம திரில்லிங்காக இருக்கும்.
அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றால் சிறிய பாறையில் சரணாலயத்தில் உள்ள விலங்குகளை தத்ரூபமாக செதுக்கி வைத்துள்ளனர். இது பார்ப்பதற்கே மிகவும் பிரமிப்பாக இருக்கும்.
ட்ரெக்கிங்: மூணு கிலோமீட்டர் தூரம் உள்ளே சென்றால் அடர்ந்த காட்டினுள் ட்ரெக்கிங் தொடங்கப்படும். இங்கு வனத்துறை சார்பில் வழங்கப்படும் வாகனத்தில் மட்டுமே பயணம் செல்ல முடியும். கிட்டத்தட்ட 54 கிலோ மீட்டர் வரை ட்ரெக்கிங் செல்லலாம். ட்ரெக்கிங்கில் பல வகைகளும் உள்ளன.
ட்ரெக்கிங் செல்லும் போது புலி, யானை, மான், குரங்கு, முதலை, மயில், காட்டெருமை, பாம்பு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளை பார்க்கலாம்.
Eco shop: Eco shop என்பது பழங்குடியின மக்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் அடங்கிய கண்காட்சி. இங்கே விற்கப்படும் பொருட்களை விருப்பம் இருந்தால் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
கன்னிமாரா: கன்னிமாரா என்பது இங்குள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தேக்கு மரம். இந்த மரம் 22 அடி அகலமும் 172 அடி உயரமும் கொண்டது. இந்த மரமும் இங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்!
மூங்கில் படகு சவாரி: மூங்கில் படகு சவாரி என்பது மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு படகில் சவாரி என்று சொல்லலாம். இது பரம்பிக்குளம் அணைக்கு அருகில் உள்ளது. இந்த படகு சவாரி ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்!
தூணக்கடவு அணை: இயற்கை எழில் கொஞ்சும் மரங்களும் தண்ணீரும் பார்ப்பதற்கே கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்! குடும்பத்தோடு சென்று இளைப்பாறுவதற்கு ஒரு நல்ல அமைதியான இடம் என்று தான் சொல்ல வேண்டும்!
தங்குவதற்கு: ஐ லேண்ட், மர வீடு, காட்டேஜ் போன்ற பலவிதமான தங்குமிடங்கள் இங்கு உண்டு. முன்பே முன்பதிவு செய்துதான் இங்கு தங்க முடியும்.
மிகவும் திகிலூட்டக் கூடிய, அமைதியான, மனதை ரம்யமாக்கக்கூடிய ஒரு சுற்றுலாத் தலமாக இந்த பரம்பிக்குளத்தின் நினைவுகள் எப்போதும் நம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.