கே.எஸ்.கிருஷ்ணவேனி
உத்தரகண்ட் மாநிலத்தில் மேற்கு இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஜிம் கார்பெட் தேசிய பூங்கா.
முதலில் இது எய்லி தேசிய பூங்கா என்று அழைக்கப்பட்டது. பின் புகழ்பெற்ற இயற்கை பாதுகாவலரும், வேட்டைக்காரருமான ஜிம் கார்ப்பெட்டின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த ஜிம் கார்ப்பெட் நைனித்தாலில் பிறந்தவர். இயற்கையை பேணுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். புலிகள் மற்றும் சிறுத்தை புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காக பெயர் பெற்றவர்.
ஜிம் கார்பெட் தேசிய பூங்கா இந்தியாவின் முதல் தேசிய பூங்காவாகும். இது 1936-ல் நிறுவப்பட்டது. இதில் புலிகள், சிறுத்தைகள், மான்கள் போன்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன. யானைகளும், கரடிகளும் கூட இங்குள்ளன.
இந்த பூங்காவில் ராம் கங்கா ஆறு ஓடுகிறது. இதில் முதலைகளையும் நம்மால் காண முடிகிறது.
920.9 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது, இந்த பூங்கா. வன விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் பார்ப்பதற்காக ஜீப் சஃபாரி செய்து அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வது ஒரு சிறந்த அனுபவமாக உள்ளது.
ஜீப் சஃபாரியில் நீரோடைகள், ஆறுகள், சில நீர்வீழ்ச்சிகளையும் காண முடிகிறது. 15 - 20 பேர் கொண்ட மேற்கூரை திறந்த வாகனத்தில் கார்பெட் வனத்துறை அதிகாரிகளால் இரண்டு ஷிப்ட் சஃபாரி நடத்தப்படுகிறது.
1972 இல் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து அழிந்து வரும் ராயல் பெங்கால் புலிகளை பாதுகாக்க மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த பூங்காவில் 200க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அடர்ந்த காட்டுக்குள் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சியில் 20 அடி உயரத்திலிருந்து நீர் கீழே கொட்டுகிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலங்களில் இந்த பூங்கா மூடப்பட்டு விடும். இது ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜூன் வரை திறந்திருக்கும்.
இந்த தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ராம் நகர் ஆகும். இது பூங்காவிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.