வாசுதேவன்
ஊட்டியின் அருகாமையில் உள்ள அற்புதமான இடம் மசினகுடி. முன்பு ஒருகாலத்தில் மைசூரின் ஒருபகுதியாக இருந்ததாம். தற்பொழுது தமிழகத்தில் இருக்கிறது, இந்தக் கோடை வாசஸ்தலம்.
முதுமலை சரணாலயத்தில் உள்ள இந்த இடத்தில் யானைகளும், புலிகளும் நடமாடுவதால், வண்டிகள் குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வேண்டியிருக்கிறது.
இங்கே உள்ள வீபூதிமலைக் கோயில் முருகன் மிகவும் பிரசித்திப் பெற்றவர்.
உல்லாசப் பயணிகள், ரிசார்ட்டுகளில் தங்கித் தங்கள் பொழுதை இனிமையாகக் கழிக்கின்றனர்.
இந்தப்பகுதி காட்டினுள் இருப்பதால், குரங்குகள், மான்கள், மயில்கள், முயல்கள், பலவகை பறவைகள், காட்டுப் பன்றிகள் ஏராளமாக காணப்படுகின்றன. காட்டு எருமைகளையும்
காண வாய்ப்புண்டு.
யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் உலாவுவதை கண்டு களிக்கலாம். அபூர்வமாகக் கரும் சிறுத்தை வருமாம் இந்தக் காட்டிற்கு. புலிகள் மற்றும் சிறுத்தைகளுக்கும் புகலிடம் அருகில் உள்ள காடுகள். அவை அடர்த்தியாகவும், பரந்தும் இருக்கின்றன.
காலம் காலமாக இங்கு வசித்துவரும் ஆதிவாசிகளுக்குக் குலத்தெய்வம், சித்தன்னம்மன். இந்த அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் உண்டு. வீரப்பன் இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனை வணங்கி விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்து இருந்ததாக உள்ளூர்வாசி அளித்த தகவல்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு அதிகாரி கேரளாவிலிருந்து கொண்டு வந்த இரண்டு பலாப்பழங்களை, தனது காரினுள்ளே வைத்துவிட்டு, காரின் கதவைப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டாராம். எப்படியோ பலாப்பழ வாசனை மோப்பம் பிடித்துக்கொண்டு வந்தக் காட்டு யானை ஒன்று காரைத் தூக்கி பந்தாடிவிட்டு, பலாப்பழங்களைத் தின்றுவிட்டனவாம்.
மசின குடியில் பலவகை மரங்கள் உள்ளன. விதவிதமான மூங்கில் மரங்கள் ஏராளம்.
பிளாஸ்டிக், குழலூதுவது, சப்தம் செய்வது எல்லாம் தடைசெய்து இருந்தாலும் வரும் சுற்றுலாப்பயணிகள் சிலர் இவற்றை எல்லாம் மதிப்பதே இல்லை.
கீரிப்பிள்ளைகள் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருப்பதால் பாம்புகளுக்கும் இடம் உண்டு இங்கு வசிக்க.
மான்கள் கூட்டமாக நின்று நம்மைக்கண்டு போஸ் கொடுக்கும் அழகே தனி.
ரம்யமான சூழ்நிலையில் பொழுதைக் கழிக்க ஏற்ற இடம் இந்த மசினகுடி.