ஆர்.ஜெயலட்சுமி
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாதம் ஸ்ரீவித்யா பூஜை சிறப்பாக நடைபெறும். ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமியாவும் உச்சிகால வேளையில் பார்வதியாவும், மாலையில் சரஸ்வதியாவும் காட்சி தருகிறார்.
தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் அருள்பாலிக்கும் சூலினி துர்க்கையின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.
திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் வருடந்தோறும் ஆடி மாசத்தில் லலிதா சஹஸ்ரநாம புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.108 ஸ்ரீ சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டு, லட்சம் மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.
ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடித்தவசு திருநாள் மிகக் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோயில் உள்ளது. ஆடி மாதம் இந்தக் கோயிலில் பிரம்மாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும்.
சேலத்தில் அன்னதானபட்டியில் ஆடி மாதத்தில் நடக்கும் செருப்படி திருவிழா தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத ஒன்றாகும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறங்கொண்டு வருவார்கள். பூசாரி, பக்தர் மீது மூன்று தடவை மெல்ல நீவி விடுவார்கள். இதுதான் செருப்படி திருவிழா.
கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் மூன்று தேவிகளுக்கு முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள். ஐந்தாவது வாரம் பலவகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளி என்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும்.
தர்மபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நவ சக்தி அர்ச்சனை செய்வார்கள். ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.
திருவல்லிக்கேணி எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி சுவாசினி பூஜை நடைபெறுகிறது.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் ஆடிப்பூரம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.இந்த நாளில் தேவி சாரதா மாதா ஐம்பதாயிரம் வளையல்களால் அலங்கரிக்கப்படுகிறாள். அம்பாளுக்கு சேலை,கோபுர கலசம், தாமரை,கும்பம்,வீணை முதலியவை கண்ணாடி வளையல்களால் மட்டுமே அலங்காரம் செய்யப்படுகின்றன.
புன்னைநல்லூர் மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானவள். ஆதலால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அம்மனுக்கு தைலக்காப்பு நடைபெறுகிறது. ஆடி மாதம் அம்பாள் முத்துப்பல்லக்கில் பவனி வருவது கண்கொள்ளா காட்சி ஆகும்.
நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் அன்று பூரம் கழிப்பது என்று ருதுஸ்நானம் செய்வார்கள். இந்த அம்மன் கன்னியாக இருப்பதால் இவ்வாறு செய்கிறார்கள். திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கை அந்தப் பகுதியில் இருந்து வருகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் நடைபெறும் ஆடி பூரவிழா மிகவும் விசேஷமான ஒன்றாகும். இந்த விழாவின் சிறப்பம்சமாக அம்மனுக்கு வளைகாப்பும் சீமந்தமும் சிறப்பாக நடைபெறும்.
சீமந்தத்தின்போது நன்றாக ஊற வைத்த பயிறு வகைகளை அம்பாளின் வயிற்றுப் பகுதியில் வைத்துக் கட்டுவார்கள். அதனால் கர்ப்பிணி பெண்போல அம்மன் காட்சியளிப்பாள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அபார நம்பிக்கையாகும்.