கே.எஸ்.கிருஷ்ணவேனி
பிளாட்டிபஸ்(Platypus), மற்றும் எறும்புத்தின்னியான (Echidna) இரண்டுமே ஆஸ்திரேலியாவை சேர்ந்தவை. இவை முட்டையிட்டு குஞ்சுப் பொரித்து, அந்த குஞ்சுகளுக்குப் பாலையும் ஊட்டி வளர்க்கின்றன.
இவை நீர் சார்ந்த நிலங்களில் வாழும் உயிரினங்களாகும். ஆஸ்திரேலியா மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே இவை வாழ்கின்றன.
இவை வாத்தைப் போல தட்டையான அலகும், சவ்வினால் இணைந்த கால் விரல்களும், தட்டையான வாலும், உடலில் ரோமமும், பாம்பைப் போல விஷமும் கொண்ட கலவையான உடலமைப்பைக் கொண்ட அபூர்வமான விலங்கினங்களாகும்.
இவை கரைகளில் வளை தோண்டி, அந்த வளைக்குள்ளே கூடு கட்டி அதில் தனது முடிகளைப் பரப்பி வசிக்கும். தலையின் முன்பகுதியின் வடிவம் காரணமாக இதற்கு 'வாத்தலகி' என்றுப் பெயர் வந்தது.
எலிகளைப் போல மண்ணில் வளை உண்டாக்கி, மீன்களைப் போல நீரில் நீந்தி உணவுத் தேடும், பறவைகளைப் போல் அடைகாத்து, பாலூட்டிகளைப்போல் குட்டிகளுக்குப் பாலூட்டும்.
இவற்றின் பாதங்களில் இவை நீந்துவதற்கான சவ்வுகள் உள்ளன. இவற்றைக் கொண்டு இவை நீரில் நன்றாக நீந்தும். இவை அகன்றத் தட்டையான வால் கொண்டவை.
இவற்றிற்கு செவி மடல்கள் கிடையாது. நீரில் மூழ்கும் போது அவற்றின் செவித்துளைகள் அடைத்துக் கொள்கின்றன.
இந்த உயிரினங்களுக்கு உடல் முழுவதும் அடர்ந்த முடிகள் உள்ளன. ஆனால் முட்டைகளிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ரோமம் அற்றவையாகவும் குருடாகவும் இருக்கும்.
வாத்தலகி மற்ற பாலூட்டிகளைைப் போல முலைக்காம்புகள் கொண்டவை கிடையாது. குஞ்சுகள் அதன் வயிற்றின் மேலேறி தங்களுடைய அலகால் அழுத்தி பாலை சுரக்கச் செய்து குடிக்கும்.
இவற்றின் கைகளில் ஒரு சிறிய கொடுக்கு இருக்கும். விஷத்தை சுரக்கும் இந்தக் கொடுக்குகள் சிறிய உயிரினங்களைையும் கொல்ல வல்லது.