வாசுதேவன்
கீரிகள் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்காவில் அதிகம் வசிக்கின்றன. இவை பாலூட்டி விலங்கினத்தைச் சார்ந்தவை. 34 சிற்றினங்களைக் கொண்டவை.
இவற்றின் நீளம் சராசரியாக 24 முதல் 57 செமீ இருக்கும் (வால் பகுதியை தவிர்த்து).
இவற்றின் எடை சுமார் 320 கிராமிலிருந்து 5 கிலோ வரையில் இருக்கும். இவற்றின் உணவு பூச்சிகள், பல்லிகள், பாம்புகள், பறவைகள், முட்டைகள், பழங்கள், கொட்டைகள்.
உணவுகளை சில வகை கீரிகள் தனியாக உண்ணும். இன்னும் சில வகை கூட்டமாக சென்று வேட்டையாடி பகிர்ந்து உண்ணும்.
இவை பொந்துகளில் சேர்ந்து வசிக்கும். பல வழிகள் இருக்கும் பொந்துக்களில் பொதுவாக வசிக்கும்.
இவை இரண்டு கால்களின் மூலம் எழுந்து நிற்கும், சுற்றுப் புறத்தை பார்க்கவும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் உதவும். இந்திய சாம்பல் மற்றும் சில வகை கீரிகள் விஷ தன்மை கொண்ட பாம்புக்களுடன் சண்டையிட்டு கொல்லும் தன்மை படைத்தவை.
வெள்ளை நிற கீரிகளும் உள்ளன. சில அரிய வண்ண கீரிகள் சில பகுதிகளில் காணப்படும்.
கீரிகளின் தடினமான தோல் மற்றும் மிக மிக வேகமாகவும், சுரு சுருப்பாகவும், தந்திரமாகவும் செயல்படும் திறன் பாம்புகளுடன் எதிர்த்து சண்டையிட அவைகளுக்கு சாதகமாகின்றது .
இவற்றில் இருக்கும் அசிட்டைல் கோலின் என்னும் வேதிப் பொருள் பாம்பின் விஷத்தை எதிர்க்கும் சக்தியை அளிக்கின்றது.
கீரிகளின் பற்கள் கூர்மையாக இருக்கும். அதேபோல் வால்கள் அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்கும்.
குட்டையான கால்கள் கொண்ட கீரிக்களின் காதுக்கள் மிக சிறிய வளையல் போல் வட்டமாக தோற்றமளிக்கும்.
இவை காடுகளில் 6 லிருந்து 10 வருடங்களும், வளர்ப்பு சூழ்நிலையில் அதிக வருடங்களும் உயிர் வாழும்.
இவைகளுக்கு தேவை என்றால் நீரில் நீந்தும். சில இடங்களில் கீரிகள் வளர்ப்பு பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன.
கால்களை பயன்படுத்தி பாறைகளில் மோதி முட்டைகளை உடைக்கும். இது பார்க்க வித்தியாசமாக இருக்கும்.