சி.ஆர்.ஹரிஹரன்
பூரி செய்ய மாவை தயார் செய்யும்போது அதை உடனே பயன்படுத்தி விடவேண்டும். இதனால் பூரி சுடும் போது அதிகமான எண்ணெய் குடிப்பதைத் தவிர்க்கலாம்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யப் போறீங்களா? உருளைக்கிழங்கில் கொஞ்சம் புளிப்பு இல்லாத தயிர் கலந்து பாருங்கள். வறுவல் சுவை மிகுந்து இருக்கும்.
மோர்க்குழம்பு செய்யும்போது அடுப்பை குறைவாக வைத்துக் கொதிக்க வைத்தால் மோர் திரியாமல் இருக்கும்.
தக்காளி குருமா செய்யும்போது ஒரு வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமாவின் சுவையே அலாதிதான்.
குழம்பில் உப்பு அதிகமாகி விட்டதா? கொஞ்சம் அரிசியை வறுத்து நைஸாக அரைத்து குழம்பில் சேர்த்துப்பாருங்கள். அதிகமான உப்பு குறைந்து விடும்.
தோசைமாவு புளித்துப்போய் விட்டதா? அரைக்கப் பாலில், ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து தோசை சுட்டால் முறுகலான, சுவையான தோசை தயார்.
பத்துநிமிடம் உப்புக்கலந்த நீரில் ஊறவைத்தால் உருளைக்கிழங்கு சீக்கிரம் வெந்துவிடும்.
பருப்புப்பொடிக்கு அரைக்கும்போது வறுத்த துவரம் பருப்புடன் கொஞ்சம் பொட்டுக்கடலையையும் சேர்த்து அரைத்தால் சுவை மிகுந்து இருக்கும்.
அரிசி குக்கரில் வைக்கும்போது, சில சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்தால் சாதம் பொலபொலவென்றும் இருக்கும்.
சூப் செய்யும்போது ஒரு டீஸ்பூன் அவலை வறுத்துப்பொடி செய்து சேர்த்துப்பாருங்கள். சூப் நல்ல கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.
தேங்காய் சட்னி செய்யும்போது புளிக்கு பதிலாக தக்காளியை சேர்த்துச் செய்தால் சட்னியின் ருசியே தனிதான்.