மகாலெட்சுமி சுப்ரமணியன்
தற்கால பிள்ளைகளுக்கு, பள்ளியில் பாடப் புத்தகங்களை நிறைய எடுத்து செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு எடுத்துச் செல்ல உபயோகிக்கும் பேக் தரமானதாகவும், உழைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
விலைமலிவாக உள்ளது என தரமற்ற பைகளை வாங்கும்போது நீண்ட காலம் உழைக்காததுடன், பிள்ளைகளுக்கு கழுத்து வலி, முதுகு வலி போன்றவற்றைக் கொடுத்துவிடும்.
பைகள் வாங்கும் போது ஷோல்டர் பட்டைகள் நல்ல குஷனிங்குடன், குறைந்தது 5 செ.மீ. அகலத்துடன் பட்டையாக இருக்க வேண்டும். அப்போதுதான் பையின் எடை சமச்சீராக தோள்பட்டையில் பரவும்.
அட்ஜஸ்ட் செய்யும் படி பட்டைகள் இருப்பது அவசியம். பை உடலுடன் பாந்தமாகப் பொருந்தும்படி இருக்க வேண்டும்.
ஒட்டி இருக்கும் பகுதியிலும் மெத்தென்று இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். உள்ளிருக்கும் பொருட்கள் முதுகில் குத்தாமல் இருக்க இது உதவும்.
இடுப்பில் பொருந்தும்படி பெல்ட்டுடன் கூடிய பைகள் வாங்குவது சிறந்தது. இதனால் பையின் எடை முதுகிலும், இடுப்பிலும் சமமாக பரவி இருக்கும்.School bag
பையின் உட்புறம் பட்டைகள் இருந்தால், புத்தகங்கள் முன்பக்கம் சரியாமல், முதுகை ஒட்டியபடி நகராமல் இருக்கும்.
அதிக கனமுள்ள புத்தகங்களை முதுகை ஒட்டி வரும்படி வைக்க முதுகு வலி வராது.
ஒவ்வொரு பொருளையும் வைக்க தனித் தனி கம்பார்ட்மென்ட் இருப்பது நல்லது. இதனால் பொருட்கள் இடம் மாறாமல் சரியாக இருக்கும்.
பைகளை சரியான அளவில் வாங்குங்கள். பையை பெரிதாக வாங்கும்போது வெயிட் அதிகமாவதுடன் குழந்தைகளின் நடையும் மாறும்.
சரியான அளவுள்ள பை என்பது கழுத்துப் புறம்,தோள்பட்டைக்கு வெளியிலோ நீட்டிக்கொண்டு இருக்கக்கூடாது.
இடுப்பிற்குக் கீழாக தொங்கிக்கொண்டிருக்கும் பைகளைத் தவிர்க்க வேண்டும். ஒரே பக்கமாக பையை மாட்டி செல்வதும் தவறு. முதுகு, கை, தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். எனவே, இரண்டு பட்டைகளும் இரண்டு தோள்பட்டைகளில் நன்கு பதிய வேண்டும்.
குழந்தைகள் கவனத்திற்கு:
சரியான முறையில் தோள் பையை மாட்ட முதலில் பையை நாற்காலியில் வைக்கவும். முழங்கால்களை இலேசாக பின்புறம் மடித்தபடி சேரின் விளிம்பில் அமரவும். பின்புறமாக பையின் இரண்டு பட்டைகளிலும் இரு கைகளையும் நுழைத்து வெளியே கொண்டு வரவும்.
ஷோல்டர் பட்டைகளையும், இடுப்பு பட்டைகளையும் சரியாக பொருத்திக்கொள்ளவும். நேராக நிமிர்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடக்கவும்.
School bagபையுடன் வாட்டர் பையை வைத்து கூடியவரை கைகளை ஃப்ரீ யாக வைத்துக்கொண்டு நடக்கவும்.
பஸ்ஸிலோ, மாடிப்படிகளிலோ ஏறும்போதோ பிடிமானங்களை பிடித்துக்கொள்ள தயங்கக் கூடாது.
வாரம் ஒருமுறை பையைச் சுத்தப்படுத்தி தேவையில்லாதவற்றை வெளியில் எடுத்துவிட வேண்டும்.