எஸ்.ராஜம்
சுதந்திரப் போராட்ட வீரரான பாஷ்யம் ஆர்யா என்பவர்தான் பாரதியாரின் அதிகாரப்பூர்வ படத்தை வரைந்தவர்.
பல்வேறு வகை பாடல்கள் இயற்றிய பாரதியார், தாலாட்டு பாடல்கள் மட்டும் எழுதவில்லை.
பாரதியார் எப்போதும் தன் மனைவி செல்லம்மாவுக்கு கடிதம் எழுதும் போது, 'எனதருமைக் காதலியே' என்றுதான் தொடங்குவாராம்.
பாரதி தமிழோடு திருநெல்வேலி கல்லூரியில் ஆங்கிலம்; காசியில் இருந்தபோது சமஸ்கிருதம் - ஹிந்தி; புதுச்சேரியில் பிரென்ச், வங்காளம்; முதல் உலகப்போரின்போது ஜெர்மன், லத்தீன் மொழிகளையும் கற்றறிந்தார். மேலும் உருது, தெலுங்கு, அரபி, மலையாளம், சீன மொழிகளையும் கற்றார்.
மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மா பிறந்த ஊர் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் ஆகும். அங்கு பாரதி, தன் மனைவி செல்லம்மாவின் தோளில் கை போட்டு நிற்கும் சிலை உள்ளது. இது 2022 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் நிறுவப்பட்டது.
பாரதியார் எழுதிய அத்தனை கவிதைகளையும் செல்லம்மா பாதுகாப்பாக வைத்திருந்து ராஜாஜி, எழுத்தாளர் கல்கி, திரு.வி.க போன்றோரின் உதவியுடன், நூல்களாக வெளிவரச் செய்துள்ளார். பாரதியாரின் கவிதைகளை இன்று நாம் படித்து, ரசிக்கக் காரணம் அவர்தான்.
விநாயகரிடம் பாரதியார் கேட்டுப் பெற்ற வரங்களில், கனக்கும் செல்வம், 100 வயது, இரண்டும் அவருக்கு வாய்க்கவில்லை.
புதுச்சேரி மணக்குள விநாயகர் மீது பாரதியார் பாடிய விநாயகர் நான் மணிமாலை, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
பாரதியாரின் பொன்மொழிகள் சில: பயமே பாவங்களுக்கெல்லாம் தந்தை.
மலர்ந்த முகமும், இனிய சொல்லும்தான் இன்பமாக வாழ நல்ல வழி.
புத்தியை மீறி செயல்படும் சக்தி, மனதுக்கு உண்டு. தேசக் கல்விக்கு குடும்பக் கல்வியே வேர்.