ஆர்.ஜெயலட்சுமி
தூதுவளைக் கீரையை பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட, கபத்தை எளிதில் உடைத்து விடக் கூடியது. தூதுவளை கீரை மூளைக்கு நல்ல பலம் தருவதோடு ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்.
காசினிக் கீரையை சாப்பிட்டு வந்தால், ரத்தம் நன்கு விருத்தியாகும். இது தேக உஷ்ணத்தை சமன்படுத்த வல்லது. தேகத்தில் உள்ள வீக்கத்தையும் வடியச் செய்யும்.
முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கண் சம்பந்தமான எல்லா வியாதிகளையும் இது போக்குகிறது. பித்த சம்பந்தமான நோய்களையும் குணமாக்குகிறது.
அகத்திக்கீரையில் வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைய உள்ளன. அதனால் இது எலும்பு சம்பந்தமான எல்லா வியாதிகளையும் எளிதில் போக்கக்கூடியது.
மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவது உடம்பிற்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணையும், வாய்ப்புண்ணையும் ஆற்ற மணத்தக்காளி கீரை போல் வேறு எந்த கீரையும் சொல்ல முடியாது.
வெந்தயக் கீரையை சாப்பிட்டால் மந்தமான அறிவை தெளிவுப்படுத்தும், சோம்பலை போக்கி சுறுசுறுப்பை உண்டு பண்ணும்.
முளைக்கீரையில் உடலை வளர்க்க தேவையான ஏபிசி உயிர்த்துகளும் உள்ளன. அதனால் இதை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படாது.
புதினா கீரையை அவ்வப்போது துவையலாக செய்து உண்டு வருவது மிகவும் நல்லது. கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த இது ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.
பொதுவாக கீரை வகைகளில் புழு பூச்சிகள் நிறைய ஒட்டிக் கொண்டிருக்கும். அதனால் சமைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
கீரைகளை பறித்த சில மணி நேரங்களில் சமைத்து சாப்பிட வேண்டும். வாடிய கீரைகளில் சத்து அவ்வளவாக இருக்காது.
கீரைகளை அவிக்கும் பொழுது அதிக தண்ணீர் வைத்தல் கூடாது. வெந்த பிறகு அதில் உள்ள நீரை இறுத்து விடுதல் கூடாது. அதையும் சேர்த்து சமைப்பதே நல்லது.