ஸ்ரீ கிருஷ்ணரின் எட்டு திருக்கோலங்கள்!

எம்.கோதண்டபாணி

விளையாடல்கள் பல புரிந்து அகிலத்தையே கட்டுண்ட அருளாளன். அன்னை யசோதையின் அணைப்பில் குட்டி கிருஷ்ணன்.

கோபியரின் வீடுகளில் மாயமாய் புகுந்து, மதி மயக்கத்தில் அவர்களை ஆழ்த்தி மந்தகாசப் புன்னகையுடன் வெண்ணெய் திருடி உண்டு களிக்கும் மாயக்கிருஷ்ணன்.

ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வதே சிறந்த வாழ்வு எனும் தத்துவத்தை உணர்த்தும் காளிங்க நர்த்தனன்.

இந்திரன் போன்ற தேவர்களை விடவும், இயற்கை செல்வமான மலைகளே மனிதர்கள் வணங்க வேண்டிய மாபெரும் தெய்வம் என்பதை உணர்த்திய கோவர்த்தனகிரிதாரி கோபாலன்.

கோபியரின் மனம் நிறைந்த கோபாலனின் கானக் குழலோசைக்கு காலமெல்லாம் காத்துக்கிடந்த ராதையுடன், ராதாகிருஷ்ணன்.

முப்பெரும் தத்துவப் பொருளாய் இருந்து தாமே இந்த உலகை இயக்கும் சக்தியாய் விளங்குவதை உணர்த்தும் ருக்மிணி, சத்யபாமாவுடன் முரளிதரன்.

தாயார் மகாலக்ஷ்மியுடன் இணைந்து, இல்லறத்தை இனிமையாக்கும் கோலத்தில் சம்மோஹன கிருஷ்ணன்.

‘யார் ஒருவர் தன்னை முழுவதுமாக உணர்ந்து, சரணாகதி அடைகிறாரோ அவரே இறைவனை உணரவும், இறை நிலையை அடையவும் முடியும்’ என்பதை உணர்த்தும் கீதோபதேசத் திருக்கோலம்.